மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டலால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் உள்ளது. இதனைக் கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து, எதிர்வரும் ஆவணி 6 மற்றும் 7 (06-08-2025 மற்றும் 07-08-2025) ஆகிய திகதிகளில் விழிப்புணர்வு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில், இப்போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் மேலும் தெரிவித்ததாவது:
“மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக மணல் உள்ளது. இந்த மணல், இல்மனைட் கனிமத்தைக் கொண்டிருப்பதால், உலகளவில் பெரும் கேள்வி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்தேசிய நிறுவனம் ஒன்று இல்மனைட் மணலை அகழ முயற்சித்து வருகிறது. இதற்கான அனுமதிகள் இழுபறியில் இருந்த போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அவை வழங்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, அவுஸ்திரேலிய நிறுவனம் அகழ்வுக்கான சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை சுற்றுச்சூழல் அதிகார சபையிடம் சமர்ப்பித்திருந்தது. இதற்கு சுற்றுச்சூழல் அதிகார சபை சாதகமான அறிக்கையை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்தேசிய நிறுவனங்களுக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இல்மனைட் மணல் அகழப்பட்டால், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மன்னார் மாவட்டத்தின் வாழ்நிலங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்து, மக்களின் வாழ்விடங்களையும் பூர்வீக நிலங்களையும் அழித்துவிடும் அபாயம் உள்ளது. இந்த அழிவைத் தடுக்கவும், எமது பூர்வீக நிலங்களையும் மக்களின் இருப்பையும் பாதுகாக்கவும், “கருநிலம் பாதுகாப்பு” என்ற கருப்பொருளுடன் மக்களை விழிப்புணர்வு செய்யும் போராட்டத்தை முன்னெடுக்க இளையோர் வீதிக்கு இறங்கவுள்ளோம். இப்போராட்டத்தில் விழிப்புணர்வு நாடகங்கள், கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட செயற்பாடுகள் முதன்மை பெறவுள்ளன. மேலும், போராட்டத்தின் இறுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்படவுள்ளது. இப்போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்கள், குறிப்பாக இளையோர், முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறோம்.” என்றனர்

