ஜப்பானில் வாய்ப்புக்களை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களின் மொழித் திறன் மற்றும் பயிற்சியை மேம்படுத்துவதன் மூலம் தொழில் எதிர்பார்ப்புடன் இருப்பவர்களின் தரத்தை மேம்படுத்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்து வருவதாக பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி. சேனநாயக்க தெரிவித்தார்.
தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐ.எம்.ஜப்பானின் தலைவர் கிமுரா ஹிசாயோஷி மற்றும் நிர்வாக பணிப்பாளர் புககாவா மசாஹிகோ ஆகியோர் நேற்று பணியகத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியபோதே சேனநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
ஜப்பானில் தாதியர் துறையில் இலங்கையர்களுக்கு அதிக தேவை இருப்பதால், தாதியர் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது பொருத்தமானது என்று ஐ.எம். ஜப்பானின் தலைவர் தெரிவித்ததுடன் அதற்காக, ஒரு பயிற்சிக் குழுவைப் பராமரிப்பது பொருத்தமானது என்றும் கூறினார்.
சிறப்புத் திறன் பெற்ற தொழிலாளர்களுக்கான திறன் தேர்வு தொடர்பான கற்பித்தல் நடவடிக்கைகளை பணியகம் மூலம் நடத்துவதற்கு ஐ.எம் ஜப்பானின் ஆதரவை வழங்கவும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதன்போது, தொழில்நுட்ப சேவை பயிற்சியாளர்களாக ஜப்பானுக்கு கடந்த தினம் புறப்பட்ட 12 பயிற்சியாளர்களுக்கும், விசேட திறன்மிக்க தொழிலாளர் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 3ஆம் திகதி வெளிநாடு செல்லவுள்ள 8 தொழிலாளர்களுக்கும் விமானப் பயணச்சீட்டுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஐ.எம். ஜப்பான் இடையே கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இலங்கையர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், 600 பேருக்கு தொழில்நுட்ப சேவைப் பயிற்சியாளர்களாகவும், சிறப்புத் திறன் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 51 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

