ஏற்றுமதி வருமானம் ஒரு சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்வு !

60 0

ஒரு சதவீதமாக இருந்துவந்த கடந்த 10 ஆண்டுகளுக்கான ஏற்றுமதி வருமான வளர்ச்சி  தற்போது 7  சதவீதமாக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

கட்டுகஸ்தோட்டை, மகாவலி ரீச் ஹோட்டலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் வரலாற்றில் மிக உயர்ந்த ஏற்றுமதி வருமானம் இந்த ஆண்டு எட்டப்பட்டது என்றும் அவர் கூறினார்.

விவசாய உற்பத்திகள் மேற்கொள்ளப்படாத  நிலங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி, அதனை ஒரு தரவுவங்கியாகப் பேணவுள்ளதாகவும் அத்தகவல்களின்படி, அடுத்த ஐந்து வருடங்களில் ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

பயிரிடக்கூடியதும், ஆனால் தற்போது பயிர்ச்செய்கை மேற்கொள்ளாத நிலங்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட ஒரு தேசிய நில வங்கி நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்படி நிலங்கள் பற்றிய தகவல்களை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கி, அவர்கள் ஊடாக  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஏற்றுமதி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த நிலங்கள் அந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஏற்றுமதி வருவாயில் வளர்ச்சி 1%ஆக இருந்தது. ஆனால், இப்போது அதன் வளர்ச்சி விகிதத்தை 7%ஆக அதிகரிக்க முடிந்துள்ளது என்றும், நாட்டின் வரலாற்றில் மிக உயர்ந்த ஏற்றுமதி வருவாய் இந்த ஆண்டு எட்டப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இதற்கு சிறு தொழில்முனைவோர்கள் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர். எதிர்காலத்தில் அவர்களின் பங்களிப்பு மேலும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கத்தால் ஏற்றுமதி ஒருங்கிணைப்புக்காக நிறுவப்பட்ட சிறப்புப் பிரிவு காரணமாக, தொடர்ந்து பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிந்துள்ளது என்று ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

மத்திய மாகாண  முதலீட்டாளர்கள் ஈட்டித்தரும் வருடாந்த வருமானத்தை 179 மில்லியன் டொலர்களிலிருந்து 500 மில்லியன் டொலர்களாக அதிகரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஏற்றுமதி மேம்பாட்டு அதிகார சபை  உள்ளிட்ட அரச நிறுவனங்களின் தீவிர பங்களிப்பு இதற்காக வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஏற்றுமதி மேம்பாட்டு அதிகார சபையால்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில்  மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன்,  மத்திய மாகாண பிரதம செயலாளர் சரத் பிரேமவன்ச, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த, ஏற்றுமதி மேம்பாட்டு அதிகார சபையின்  தலைவர் மங்கள விஜேசிங்க, அதிகார சபையின்  மத்திய மாகாண உதவிப் பணிப்பாளர் துஷார ஜெயலத் மற்றும் மத்திய மாகாண ஏற்றுமதித்துறை தொடர்பான தொழிலதிபர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.