அரசாங்கத்துக்கு சொந்தமான பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகள் பாரிய கடனில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த இரு நிறுவனங்களையும் பாதுகாக்கத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை (29) அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பெல்வத்தை மற்றும் செவனகல சீனித் தொழிற்சாலைகள் இரண்டும் நமது நாட்டிற்கு வளங்களாகும். அரசாங்கத்திற்குச் சொந்தமான இரு நிறுவனங்களாகும். இவ்வாறு காணப்பட்ட போதிலும், இந்த இரண்டு நிறுவனங்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாட்டிற்கும், அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் பல சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்ட போதிலும், இந்த இரண்டு நிறுவனங்களும் நாளுக்கு நாள் வீழ்ச்சியை கண்டு வருகிறது.
பெல்வத்த சீனி உற்பத்தி தொழிற்சாலை கடந்த 9 மாதங்களாக ஊழியர் சேமலாப நிதியத் தொகையைச் செலுத்தவில்லை. இவ்வாறு செலுத்த வேண்டிய மொத்தத் தொகை 3240 இலட்சமாகும். இதன் காரணமாக, 3 மாதங்களுக்கு 230 இலட்சம் ஊழியர் சேமலாப நிதிய மிகை ஊதியத்தைச் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளன. 2024 ஆகஸ்ட் இல் இலங்கை வங்கியிலிருந்து பல இலட்சம் கடன் பெறப்பட்டுள்ளது. அண்மையில் மற்றுமொரு கடனையும் பெற்று சம்பளம் செலுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கும் பல இலட்சம் நிலுவை தொகையை செலுத்த வேண்டியுள்ளது. பெல்வத்த சீனி உற்பத்தி தொழிற்சாலையின் நிலை இவ்வாறு தான் காணப்படுகிறது. செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலையின் நிலைமையும் இதேபோன்று மோசமாகவே காணப்படுகிறது. சுமார் 3900 விவசாயிகள் இந்த செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலையின் மூலம் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இலங்கை வங்கிக்கும் பல இலட்சம் கடன் செலுத்த வேண்டியுள்ளது.
இதன் விளைவாக, இந்த இரண்டு நிறுவனங்களும் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. இந்த இரண்டு நிறுவனங்கள் குறித்தும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போது, கிடைக்கும் பதில் தான் எந்தப் பிரச்சினையும் இல்லை, இந்த நிறுவனங்கள் நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன என்பதாகும். இந்த கட்டத்தில், இந்த இரண்டு நிறுவனங்களின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலம் குறித்து பிரச்சினை உருவெடுத்து காணப்படுகின்றன. வினைதிறனற்ற அரச நிர்வாகத்தின் கீழ் இந்த இரண்டு நிறுவனங்களும் நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வருகின்றன.
இந்தப் பிரச்சினையைப் புறக்கணிக்காமல், பெல்வத்த, செவனகல இந்த இரண்டு நிறுவனங்களையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தையும், விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எடுக்க முடியுமான சரியான தீர்மனத்தை எடுங்கள். இந்த இரண்டு நிறுவனங்களின் பாதுகாப்பிற்காகவும், விவசாயிகள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காகவும் அவர்களினது உரிமைகளுக்காகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக நானும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் தொடர்ச்சியாக முன்நிற்போம். இந்த இரு நிறுவனங்களையும் பாதுகாத்தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

