“கெஹெல்பத்தர பத்மே”வுக்கு போலி பிறப்புச் சான்றிதழை தயாரித்து கொடுத்த பிரதேச செயலக பதிவாளருக்கு பிணை!

63 0

டுபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவருக்கு “தொன் அடிதய அஹிமான“ என்ற பெயரில் போலி பிறப்புச் சான்றிதழை தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சீதாவாக்கை பிரதேச செயலகத்தின் பதிவாளரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று திங்கட்கிழமை (28) உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சீதாவாக்கை பிரதேச செயலகத்தின் பதிவாளரை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சீதாவாக்கை பிரதேச செயலகத்தின் பதிவாளரான ருவனி வாசனா என்ற பெண்ணொருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் “கெஹெல்பத்தர பத்மே”வுக்கு போலி பிறப்புச் சான்றிதழை தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில் கடந்த 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.