இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு உள்நாட்டு விசாரணை நீதியை பெற்றுத்தராது. எனவே சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்க வலியுறுத்தி கிளிநொச்சி கரைச்சி, பளை, பூநகரி பிரதேச சபைகளின் அடுத்த அமர்வில் பிரேரணை ஒன்றை ஐனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான சமத்துவக் கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் சமர்த்துள்ளனர்.
குறித்த பிரேரணையில குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை இனமான தமிழ் இனம் மீது இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் 2009 வரை மேற்கொண்டது ஒரு இனவழிப்பு நடவடிக்கையே எனவும். அதன் உச்சக்கட்டமாக 2009 இறுதி யுத்தகாலத்தில் மிக கொடூரமான இனவழிப்பு யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். அத்தோடு ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள், தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசங்களான வடக்கு கிழக்கில் பல இடங்களில் பாரிய மனித புதைகுழிகள் காணப்படுகின்றன. அதன் ஒரு பெரும் சாட்சியாக செம்மணி மனித புதைக்குழி உள்ளது.
எனவேதான் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு உள்நாட்டு விசாரணைகள் நீதியை பெற்றுதராது ஆகவே சர்வதேச சமூகம் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை என்பன ஒரு சர்வதேச விசாரணை பொறிமுறையை உருவாக்கி தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என இப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

