நம்பி வாக்களித்த மக்களை அரசாங்கம் ஏமாற்றக் கூடாது – அஜித் பி பெரேரா

59 0

நாட்டில் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் பரவலாகப் பேசப்படுகிறது. கல்வித்துறையில் பாரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்வதாகவே தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மக்கள் அதனை நம்பியே வாக்களித்தனர். எனவே இதனை அரசியலாகப் பார்க்காமல் அரசாங்கம் அதன் பொறுப்பினை நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இன்று நாட்டில் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் பரவலாகப் பேசப்படுகிறது. கல்வித்துறையில் பாரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்வதாகவே தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மக்கள் அதை நம்பி வாக்களித்தனர். இது அரசியல் அல்ல. அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஜனவரியிலிருந்து 1 – 6ஆம் வகுப்புக்களில் பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பவர்கள் இது தொடர்பில் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு முரணான கருத்துக்களையே கூறி வருகின்றனர். இது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கல்வியில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் ஜனாதிபதியின் கருத்துக்களுக்கும் ஆளுங்கட்சியினரின் கருத்துக்களுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளுக்கு என்ன காரணம்?

பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது மாத்திரம் கல்வி சீர்திருத்தம் அல்ல. ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தல் உட்பட அனைத்தும் அதில் அடங்கும். அதேபோன்று பாடசாலை கல்வியை மாத்திரம் மறுசீரமைப்பதாலும் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.

பாராளுமன்றத்தில் சட்டத்தின் ஊடாகவே இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். 5 மாதங்களுக்குள் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பது எமக்குத் தெரியாது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம். எனவே அரசாங்கம் இந்த விவகாரத்தில் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றார்.