பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு-சபாநாயகர் சந்திப்பு

70 0

பாராளுமன்ற நடைமுறைகளைப் பலப்படுத்தும் நோக்கில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சித் திட்டம் வெற்றி அளித்திருப்பதாக, அத்திட்டத்தை முன்னெடுத்த பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் தெரிவித்தது.

கடந்த 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் பின்னர் இதன் முன்னேற்றம் தொடர்பில் சபாநாயகரைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இக்குழுவினர் கடந்த வியாழக்கிழமை (24) அவரைச் சந்தித்தபோதே இவ்வாறு கருத்துத் தெரிவித்தனர்.

இலங்கைப் பாராளுமன்றத்துடன் இணைந்து பாராளுமன்ற நடைமுறைகளைப் பலப்படுத்தும் நோக்கில், ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை, பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஐக்கிய இராச்சியக் கிளை (CPA UK) மற்றும் ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றம் (WFD) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்தமைக்காக சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை உறுப்பினரும், ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் தலைவருமான யஸ்மின் குரேஷி (Yasmin Qureshi) தலைமையிலான இந்தத் தூதுக் குழுவில், ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை உறுப்பினர்களான ஜெமி ஸ்டோன் (Jamie Stone), போலட் ஹமில்டன் (Paulette Hamilton), அன்ரூ ஸ்னோஃவ்டன் (Andrew Snowden) உள்ளிட்ட பிரதிநிதிகள் அங்கம் வகித்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, புதிய உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் தங்கள் அறிவு மற்றும் அனுபவங்களை பிரித்தானிய பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழுவுடன் பகிர்ந்துகொண்டதன் ஊடாகப் பாராளுமன்ற நடைமுறைகள் பற்றிய புரிதலை பெற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கிடைத்த வாய்ப்பு மற்றும் உறுப்பினர்களின் வகிபாகத்தில் காணப்படும் சவால்கள், பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள், பாராளுமன்ற பணியாளர்களின் வகிபாகம், குழுக்களின் விசாரணைச் செயற்பாடுகள், குழு அறிக்கைகளைத் தயாரித்தல், ஒழுக்கக் கோவை மற்றும் தரநிலைகள், வரவு – செலவுத் திட்டம் மற்றும் நிதிக் கட்டுப்பாடு, வளங்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகளின் ஊடான தொடர்பாடல், மக்களின் பங்கேற்பு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான சமூக உறவுச் செயற்பாடுகளை எவ்வாறு பயன்படுத்தலாம் போன்ற விடயங்களில் மூன்று நாட்களும் பல்வேறு மட்டத்திலான அனுபவப் பகிர்வுகளும், கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.

அத்துடன், இந்த நிகழ்ச்சியின் கீழ் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர், அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர்களுடனும் பிரித்தானியக் குழுவினர் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர்.

அத்துடன், திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான ஒன்றியத்தின் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராஜபுத்திரன் இராசமாணிக்கம் உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில், திறந்த பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை திறந்த அரசாங்கப் பங்குடமையின் தீவிர உறுப்பினராக இருப்பதன் முக்கியத்துவத்தை இணைத் தலைவர் இங்கு நினைவுபடுத்தினார்.

இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பதவியணித் தலைமை அதிகாரியும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, பிரதி செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன மற்றும் பாராளுமன்ற திணைக்களங்களின் பிரதானிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.