எதிர்க்கட்சிகள் சதித்திட்டம் இடுவது உண்மையெனில் அதனை நிரூபியுங்கள்

65 0

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சதித்திட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறுகின்றனர். அவ்வாறு சதித்திட்டம் இடப்படுவது உண்மையெனில், அதனை வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனை விடுத்து எதிர்க்கட்சிகளை குறை கூறிக் கொண்டிருப்பது சிறந்த ஆட்சியல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வருண ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

விவசாயப் பகுதிகளில் காணப்படும் வன விலகங்குகளை விவசாயிகள் தங்களிடமுள்ள ஆயுதங்களால் அழிக்க முடியும் என அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு இவர்களிடம் எவ்வித தீர்வும் இல்லை. இயற்கை அனர்த்தங்கள், வன விலங்குகளால் விவசாயத்துக்கு ஏற்படும் பாதிப்புக்களை எவ்வாறு தவிர்த்துக் கொள்வது என்பதற்கான பதில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் இருக்க வேண்டும்.

பிரச்சினைகளுக்கு தம்வசம் பதில் இல்லாததால் லால் காந்த போன்றவர்கள் இவ்வாறு நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். தமக்கான பொறுப்புக்களை தட்டிக் கழிப்பதற்காக விவசாயிகளிடம் பொறுப்புக்களை வழங்கிவிடுகின்றனர்.

பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதை விடுத்து தற்காலிகக் கதைகளை கூறுவதால் மோசமான விளைவுகளே கிடைக்கும். இவ்வாறான கருத்துக்களை கூறிக் கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சதித்திட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறுகின்றனர்.

அவ்வாறு சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவது உண்மையெனில் அதனை வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். தினந்தோறும் பாதாள உலகக் குழுக்களால் துப்பாக்கிச்சூட்டுக்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்கள் கொல்லப்படுகின்றனர்.

ஆனால் இன்று வரை இவற்றுக்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளைக் குறைகூறிக் கொண்டிருப்பது சிறந்த ஆட்சியல்ல.

நாட்டில் கல்வி முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் அந்த மறுசீரமைப்புக்கள் அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்றதாக இருக்கக் கூடாது. அத்தோடு அரசாங்கம் அதன் கல்வி கொள்கையை தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்றார்.