காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கைகளையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வியடையும் என புதிய ஜனநாயக முன்னணியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிப் பெறவில்லை. இருப்பினும் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் வாக்குவங்கி வீதம் 23 இலட்சத்தால் குறைவடைந்தது.
மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. இதற்கு கடந்த அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதாக தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும் இதுவரையில் அதற்குரிய எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தனிநபர் பிரேணையை முன்வைத்துள்ளனர். இருப்பினும் அந்த பிரேரணைகள் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். இருப்பினும் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வியடையும் என்பதால் தேர்தலை நடத்துவதற்கு காத்திரமான எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுப்பதில்லை என்றார்.

