அரசாங்கத்திடம் கல்வி மறுசீரமைப்பில் தெளிவான கொள்கை இல்லை – வருண ராஜபக்ஷ்

69 0

கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்வதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றபோதும் அரசாங்கத்திடம் தொடர்பில் முறையான கொள்கை ஒன்று இல்லை. அதேநேரம் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவில் கல்வியலாளர்கள் என யாரும் இல்லை என ஐக்கிய  மக்கள் சக்தி கம்பஹா தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ஷ் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை () இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு  தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என 40 வருடங்களுக்கு முன்பிருந்தே நாங்கள் தெரிவித்து வருகிறோம். ,இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களும் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் நடவடிக்கை எடுத்திருந்தன. அந்த வகையில் தற்போது இந்த அரசாங்கமும் அதனை செய்ய ஆரம்பித்திருக்கிறது. கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் இந்த நடவடிக்கையை எவ்வாறு செய்வது? அதற்கான வேலைத்திட்டம், இது தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை என்ன என்பது தொடர்பில் எதுவும் தெரியாது. கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தால், அதுதொடர்பில் தெளிவான வேலைத்திட்டம் இருக்க வேண்டும். இவை எதுவும் இல்லாமல் அரசாங்கம் திடீரென கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்வதாக தெரிவித்து, ஒரு குழுவொன்றை நியமித்துள்ளது. ஆனால் அந்த குழுவில் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் கட்சி சார்ந்தவர்களுமே இருக்கிறார்கள். மாறாக கல்வியியலாளர்கள் என யாரும் இல்லைை.

அதேநேரம் கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்வதாக தெரிவித்து கிராமப்புறங்களில் இருக்கும் பின்தங்கிய பாடசாலைகளை மூடிவிடுவது அதற்கு தீர்வல்ல. கல்வித்துறை வினைத்திறனாக  வேண்டும் என்பதற்காக சஜித் பிரேதாச கிராமங்களில் இருக்கும் 350க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு ஸ்மாட் வகுப்பறைகளை பெற்றுக்கொடுத்தார்.கிராமங்களில் இருக்கும் பின்தங்கிய பாடசாலைகளை மூடிவிடுவதற்கு பதிலாக அந்த பாடசாலைகளை மீள கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆசிரியர் சங்கங்களுடன் கலந்துரையாடி வருகிறாரே தவிர, மாகாண கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடவில்லை. நாட்டில் இருக்கும்  அரச பாடசாலைகளில் மாகாணசபைக்கு கீழே அதிகமான பாடசாலைகள் இருக்கின்றன. அதனால் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மாகாண கல்வி அதிகாரிகளுடனே ஆரம்பமாக கலந்துரையாட வேண்டும்.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி 40 நிமிடங்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். இதில்  இருக்கும் குறைபாடுகள், மாணவர்களுக்கு  எவ்வாறான கல்வியை வழங்க வேண்டும் போன்ற விடயங்களை தெரிவித்தார். ஆனால் அதற்கான தீர்வாக எதனையும் தெரிவிக்கவில்லை. அதேபோன்று பிரதமரும் உரையாற்றினார். அவரும் தீர்வை முன்வைக்கவில்லை. கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளவதாக அரசாங்கம் தெரிவித்தாலும் அவர்களிடம் இதுதொடர்பான கொள்கை ஒன்று இல்லை. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களை மாத்திரமே இவர்கள்  வைத்துக்கொண்டு செயற்படுகின்றனர்.

எனவே அரசாங்கம் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு அரசியல் செய்கிறார்களே தவிர, அவர்கள் நாட்டை நிர்வகிப்பதில்லை. எந்த அமைச்சும் செயற்படுவதாக தெரியவில்லை என்றார்.