60 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர்கள் கைது

87 0

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை  (28) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் புத்தளம், நாத்தாண்டிய,  கொட்டராமுல்லை பிரதேசத்தில் வசிக்கும் 30 மற்றும் 42 வயதுடைய இரு வர்த்தக்கர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் இருவரும் டுபாயில் இருந்து இன்றைய தினம் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை  விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் கொண்டு வந்த பயணப்பொதிகளில் இருந்து 40,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 200 சிகரட்டு காட்டுன்கள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளின் மொத்த பெறுமதி 60 இலட்சம் ரூபா என விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.