ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அடுத்த மாதமளவில் அனுப்பி வைக்கப்படவுள்ள கூட்டுக்கடிதத்தின் வரைபினை இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் வழங்கவுள்ளோம். உள்ளடத்தில் அவர்களுக்கு உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் அவர்களின் கையொப்பத்தையும் உள்ளீர்த்து அனுப்புவதற்கு தயாராகவே உள்ளோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கையின் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி மீண்டும் கடிதமொன்றை அனுப்புவதற்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள்,பாதிக்கப்பட்ட தரப்புக்கள் கூட்டிணைந்து ஏகமனதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்துள்ளன.
அக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும்ரூபவ் அதில் பங்கேற்பதில்லை என்று கட்சி தீர்மானித்திருப்பதாக பதிலளிக்கப்பட்டிருந்தது. எனினும் எக்காரணத்துக்காக குறித்த கலந்துரையாடலில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறான நிலையில் கஜேந்திரகுமார் கருத்து வெளியிடுகின்றபோது,
இலங்கைத் தமிழரசுக்கட்சியை ஓரங்கட்ட வேண்டுமென்பது எமது நோக்கமல்ல. அவர்களுக்கு எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.
அந்த வகையில் அவர்கள் தமிழ் மக்களின் அதிகமான பிரதிநிதிகளைக் கொண்டதொரு கட்சியாகவே உள்ளது. அந்த வகையில் அவர்களே பொறுப்புக்கூறல் விடயத்துக்கான நடவடிக்கைகளை முன்னின்று எடுத்திருக்க வேண்டும்.
துரதிஷ்டவசமாக அந்த நடவடிக்கைகயில் அத்தரப்பினர் ஈடுபடவில்லை. எனினும் கடந்த காலங்களில் நாம் ஒன்றிணைந்து பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கையை ஐ.நாவுக்கு அனுப்பியுள்ளோம்.
ஆகவே அவர்களும் இந்தச் செயற்பாட்டில் நிச்சயமாக பங்கேற்க வேண்டும் என்பது தான் எமது நோக்கமாகும். ஆனால் அவர்கள் கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை. சிலவேளைகளில் ஏனைய பல்வேறுபட்ட தரப்பினருக்கும் இருந்தமையால் வீணான முரண்பாடுகள் ஏற்படலாம் என்ற வகையில் அந்தச் சந்திப்பை அவர்கள் தவிர்த்திருக்கலாம்.
எனினும் , நாம் வரைபினை தயாரிக்கும் பணிகளை இந்தவாரத்துக்குள் பூர்த்தி செய்யவுள்ளதோடு அதனை தமிழரசுக்கட்சிக்கும் அனுப்பி வைக்கவுள்ளோம்.
அவர்கள் வரைபின் உள்ளடக்கங்களை ஏற்றுக்கொண்டோ அல்லது நியாயமான முறையில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமென்று கருதினாலோ அதுபற்றி கலந்துரையாடலாம். அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.
தமிழரசுக்கட்சி வரைவினை பார்த்த பின்னர் கையொப்பமிடுவதற்கு தயாரில்லை என்றால் தமக்கு ஆணை வழங்கிய தரப்பினருக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டியேற்படும். அது அவர்களுடைய விடயமாகும்.
எம்மைப்பொறுத்தவரையில் தமிழர் தேசத்தில் உள்ள ஒவ்வொருவரையும் இணைத்துக்கொண்டு இச்செயற்பாட்டில் முன்செல்வதற்கே முனைகின்றோம் என்றார்.

