கார்ல்ஸ்றுகே தமிழாலயத்தின் 33ஆவது அகவை நிறைவு விழாக் கடந்த 19.07.2025 சனிக்கிழமை 10:00 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிச் சிறப்பாக நடைபெற்றது. பொதுச்சுடரினைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தினர்கள் தமிழினத்தின் பண்பாட்டிற்கிசைவாக வரவேற்றழைக்கப்பட்டனர். அகவை நிறைவு விழா அரங்க நிகழ்வுகளுக்குச் செல்லுமுன், கடந்த ஆண்டு இயற்கை எய்திவிட்ட ஆசிரியை திருமதி அன்னலட்சுமி தியாகேசர் அவர்களுக்கான நினைவு வணக்கம் இடம்பெற்றது. ஈகைச்சுடரினைத் தமிழாலயத்தின் முன்னாள் நிருவாகியும் ஆசிரியருமான திரு. குணரட்ணம் கிருபாகரன் அவர்கள் ஏற்ற, மலர்மலையை அன்னாரின் பேரன் திரு. சண்முகநாதன் தரன் அவர்கள் அணிவித்து வணங்கியதைத் தொடர்ந்து மலர் மற்றும் சுடர் வணக்கம் நடைபெற்றது.
நினைவு வணக்கம் நிறைவுற, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் ஷசெம்மையாளன்| திரு. செல்லையா லோகானந்தம், கார்ல்ஸ்றுகே நகரக் கலாசாரப் பணியகத் துணைப் பொறுப்பாளர் திருமதி அங்கெலிகா ஸ்மிட்ற், அகதிகளுக்கான உதவி நிறுவனத் துணைப் பொறுப்பாளர் திருமதி கெற்ட்றுட், கல்வி மற்றும் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் ஷதமிழ்த்திறனாளன்| திரு. இராஜ. மனோகரன், தமிழ்ப் பெண்கள் அமைப்புப் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், தமிழ் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி வானதி நிர்மலதாசன், எற்லிங்கன் நகர முன்னாள் தேசியச் செயற்பாட்டாளர் ஹென்றி செல்வசீலன், கார்ல்ஸ்றுகே தமிழாலய நிருவாகி செல்வன் தர்மதேவன் தனுஷன் மற்றும் கார்ல்ஸ்றுகே நகரப் பிரதிநிதி திரு. பாஸ்கரமூர்த்தி லக்சன் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றிவைக்க அரங்க நிகழ்வுகள் தொடங்கின. அகவணக்கம், தமிழாலயப்பண் என்பவற்றைத் தொடர்ந்து கார்ல்ஸ்றுகே தமிழாலய நிருவாகி செல்வன் தர்மதேவன் தனுஷன் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்.
கலை நிகழ்வுகள், வாழ்த்துரைகள், மதிப்பளிப்புகள் எனத் தொடர்ந்த விழாவில், விழாவினைச் சிறப்பிக்கும் வகையிற் சிறப்புமலர் வெளியிடப்பட்டது. பெற்றோர்கள் ஒளியேந்தி அரங்கிற்கு எடுத்து வந்த சிறப்புமலரைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பரப்புரைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் தீபன் அவர்கள் வெளியிட்டு வைத்தார். முதற் பிரதியை மூத்த ஆசிரியையான திருமதி மைத்திரேயி ஞானேஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். கலைப்பிரிவுப் பொறுப்பாளர் ஷதமிழ்மாணி| திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் வெளியீட்டு உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தமிழாலயப் பெற்றோர்களுக்கும் நிருவாகியால் சிறப்புமலர் வழங்கப்பட்டது. தமிழாலய ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பைத் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் ஷசெம்மையாளன்| திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் வாழ்த்தி வழங்கி வைத்தார்.
அனைத்துலகப் பொதுத்தேர்வில் யேர்மனிய மட்டத்தில் 2023-2024 கல்வியாண்டில் முதலாம் இடத்தைப் பெற்றுத் தமிழாலயத்துக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு மதிப்பளிப்பு வழங்கப்பட்டது. மதிப்பளிப்புகளைக் கல்வி மற்றும் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் ஷதமிழ்த்திறனாளன்| திரு. இராஜ. மனோகரன், கல்விப்பிரிவுத் துணைப் பொறுப்பாளர் திரு. ராமேஸ் ஜெயக்குமார் ஆகியோரும் முன்னாள் நிருவாகிகளுக்குத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் வழங்கி வாழ்த்துரை மற்றும் சிறப்புரை என்பனவும் இடம்பெற்றன. நிறைவாக மாணவர்களுக்கான நினைவு மதிப்பளிப்பும் வழங்கப்பட்டது.
தமிழ்க் கல்விக் கழகத்தின் பிரிவுசார் பொறுப்பாளர்கள், துணைப்பொறுப்பாளர்கள், மாநிலச் செயற்பாட்டாளர், முன்னாள் நிருவாகிகள், முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பியர் ஆகியோர் கலந்துகொண்ட 33ஆவது அகவைப் பெருவிழா தமிழீழத் தாகம் சுமந்த ஈகையரின் இலக்கை அடையும்வரை தொடர்வோம் என்ற நம்பிக்கை முரசறைதலோடு 19:30 மணிக்கு நிறைவுற்றது.








































































































