60 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய கலைஞர் கைது

63 0

இலஞ்ச ஊழல் குற்ற விசாரணையில் இருந்து விடுவிப்பதற்காக இருவரிடம்  60 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக வங்கிகணக்கில் வைப்பிலிடுமாறு கோரிய கலைஞர் ஒருவர் இலஞ்ச ஊழல்  விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் ஒருவரும் விமானப்படை வீரர் ஒருவரும் மேற்படி சம்பவம் தொடர்பில் முறைபாடளித்திருந்த நிலையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை மத்துகம பகுதியை சேர்ந்த அதிபர் மற்றும் அஹூங்கல்ல பகுதியை சேர்ந்த விமானப்படை வீரர் ஒருவர் ஆகியோர் மேற்படி சம்பவம் தொடர்பில் முறைப்பாடளித்துள்ளனர். இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த  இலஞ்ச ஊழல்  விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தொடாங்கொடை (மில்கஹவத்தை வீதியை) சேர்ந்த   கலைஞர்  என அறியப்படும் கங்கானம் லியன பத்திரணகே வினோத் தரங்க என்னும் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

முறைப்பாட்டாளரான அதிபருக்கு எதிராக ஏற்கனவே இலஞ்ச ஊழல்  விசாரணை பிரிவில் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்துள்ள நிலையில், குறித்த விசாரணைகளை நிறுத்துவதாக தெரிவித்து இலஞ்ச ஊழல்  விசாரணை ஆணைக்குழுவின் கடிதம் மற்றும் விசாரணைக்காக முன்வைக்கப்பட்ட ஆவணங்களை வழங்குவதாகவும் மேற்படி சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த நடவடிக்கைகளுக்காக இலஞ்ச ஊழல்  விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக தனது வங்கி கணக்கில் 30 ஆயிரம் ரூபா பணத்தை வைப்பில் இடுமாறு சந்தேகநபர் கோரியுள்ளார்.

அதேபோல்  விமானப்படை வீரருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அச்சுறுத்தி, உடனடியாக கைது நடவடிக்கையை இடைநிறுத்த அதிகாரிகளுக்கு வழங்க 30 ஆயிரம் ரூபா பணத்தை வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறும் கோரியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கைதான சந்தேகநபர் தொடர்பில் இலஞ்ச ஊழல்  விசாரணை ஆணைக்குழு  அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.