தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்ற தங்கள் மகள் நாடு திரும்பாததால், மகளைக் காணவில்லை என பொலிசில் புகார் செய்தார்கள் ஒரு பிரித்தானிய தம்பதியர்.
இந்நிலையில், அவர்களுடைய மகள் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மகளைக் காணவில்லை என புகாரளித்த பெற்றோர்
இங்கிலாந்திலுள்ள Knebworth என்னுமிடத்தைச் சேர்ந்த கேமரான் (Cameron Bradford, 21), தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்றிருந்தார்.

அவர் ஹீத்ரோ விமான நிலையம் வந்து சேரவேண்டிய நிலையில், மகளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த பெற்றோர் கேமரானைக் காணாமல் பொலிசில் புகார் செய்துள்ளனர்.
பின்னர், கேமரான் ஜேர்மனியிலுள்ள மியூனிக் நகரில் காவலில் அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நடந்தது என்னவென்றால், கேமரான் கடைசி நேரத்தில் திடீரென மியூனிக் விமான நிலையத்துக்கு விமான பயணச்சீட்டு வாங்கியுள்ளார்.
ஜேர்மன் அதிகாரிகளைப் பொருத்தவரை, திடீரென ஒருவர் ஒரு விமான நிலையத்துக்குச் செல்வதற்கு பதிலாக வேறொரு விமான நிலையத்துக்கு பயணித்தார்கள் என்றால், ஏதோ பிரச்சினை என்று பொருள்.
ஆகவே, மியூனிக் விமான நிலையம் வந்திறங்கிய கேமரானின் உடைமைகளை பரிசோதித்துள்ளார்கள். அப்போது, அவர் தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் ஒன்றைக் கடத்திவந்தது தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து அவர் மியூனிக் நகரில் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். ஆகத்து மாதம் 6ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
விடயம் என்னவென்றால், சமீப காலமாக இதுபோல் போதைப்பொருள் கடத்தியதாக தொடர்ச்சியாக பிரித்தானிய பெண்கள் சுமார் 5 பேர் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

