மனநலப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் தப்பிச் செல்ல முயன்ற சம்பவம்

118 0

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கொழும்பு மெகசின் சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் வி. ஆர். பிரபாத் தெரிவித்துள்தாவது,

இம்மாதம் கடந்த 9  ஆம் திகதி  கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தால் திருட்டு குற்றச்செயல் ஒன்றில் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  லியனகே சஷிந்த சந்தருவான் எனும் நபர்  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றிருந்த நிலையில் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

கொழும்பு  தேசிய வைத்தியசாலையின் மனநல சிகிச்சைப் பிரிவில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட சந்தரப்பத்தில் வைத்திய பரிசோதனைக்காக விலங்கிலிருந்து அவரின்  ஒரு கையை மாத்திரம் விடுத்துள்ள நிலையில் குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

வைத்தியசாலையின் பிரதான வாயில் வரை ஓடிச்சென்ற சந்தேகநபரை சிறைச்சாலை அதிகாரிகள்  பிடிக்க முயன்ற போது, அருகில் இருந்த கண்ணாடி போத்தல்  ஒன்றை உடைத்து அச்சுறுத்தி  அதிகாரிகளையும் தாக்க முயன்றுள்ளார்.

எவ்வாறெனினும் குறித்த நபரை  சிறைச்சாலை அதிகாரிகள் மடக்கி  பிடித்து  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதுடன் வைத்திய பரிசோதனைக்கும் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் சந்தேகநபர்  தப்பிச்செல்ல  முயன்ற விடயம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின்  கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.