சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கைக்குச் சொந்தமான நீண்ட நாள் மீன்பிடி படகு ஒன்று மடகாஸ்கரின் கடல் எல்லைக்குள் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படகிலிருந்த 8 மீனவர்கள் தற்போது மடகாஸ்கரில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் புதன்கிழமை (23) பிரதி அமைச்சரை சந்தித்து, அவர்களை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஐ.எம்.யு.எல்-எ-0899-சி.எச்.டபிள்யூ (ருத் பாபஹா -6) என்ற நீண்டநாள் மீன்பிடி படகு கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி வெல்லமன்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்றுள்ளதுடன் ஜூன் 2 ஆம் திகதி மடகாஸ்கர் நாட்டின் விசேட பொருளாதார வலயத்திற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, அந்நாட்டு மீன்பிடி ரோந்து படகு மூலம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மடகாஸ்கரின் விசேட பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க அவர்கள் தவறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மடகாஸ்கர் அதிகாரிகளால் படகை சோதனையிடப்பட்டபோது, மீன்பிடி கண்காணிப்பு மையத்தால் படகின் பயணப் பாதையை கண்காணிக்க முடியாமல் போயுள்ளதுடன் படகுக்கான அனுமதிப்பத்திரம் , செல்லுபடியான மீன்பிடி உரிமம் ஆகியன இருக்கவில்லையென்றும் அந்நாட்டு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படகில் குனிரூட்டப்பட்டிருந்த 16,125 கிலோகிராம் சுறாக்களும், உலர்த்தப்பட்ட 1,618 கிலோகிராம் சுறாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. படகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சுறா இனங்கள் அழிந்து வரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த மாநாடு உடன்படிக்கையின் II ஆம் பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் மடகாஸ்கர் சுற்றுச்சூழல் புலனாய்வு பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவிக்கையில்,
இது குறித்து சீஷெல்ஸில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் செயலாளருடன் கலந்துரையாடியதுடன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம் பொருத்தமான மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் கிடைத்தவுடன், வழக்கை துரிதப்படுத்தி, மீனவர்களை விடுவித்து மீண்டும் இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். கடற்றொழில் அமைச்சும் கடற்றொழில் திணைக்களமும் இது குறித்து கவனம் செலுத்தியுள்ளதுடன், மீனவர்களின் குடும்பங்களுக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய நாடுகளின் கடல் எல்லைகளை மீறுவதால், இவ்வாறான துரதிர்ஷ்டவசமான நிலைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது. இவ்வாறான சம்பவங்கள், சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்பதற்கு பெருமளவிலான முயற்சியும் நிதியும் செலவிடப்படுகின்றது.
அனைத்து மீனவ சமூகத்தினரும், குறிப்பாகப் படகு உரிமையாளர்களும், ஏனைய நாடுகளின் விசேட பொருளாதார வலயங்களுக்குள் பிரவேசித்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து, சர்வதேசக் கடற்பரப்பில் மாத்திரம் சட்டரீதியாக மீன்பிடித்துப் பாதுகாப்பாக நாடு திரும்புமாறு கோரிக்கை விடுக்கிறோம். சட்ட ரீதியாகச் செயற்படுவதன் மூலம் இவ்வாறான சிரமங்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்றார்.
இதேவேளை இந்த கைது தொடர்பாக கடற்றொழில் அமைச்சுக்கு 2025 ஜூன் 11 ஆம் திகதி ஒரு வாட்சப் செயலி மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவல் அத்தினமே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் அனுப்பப்பட்டது எவ்வாறாயினும், படகு உரிமையாளர் இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சுக்கோ அல்லது கடற்றொழில் திணைக்களத்திற்கோ எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வழங்கவில்லை. அத்துடன், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கும் படகு உரிமையாளர் இது குறித்து அறிவிக்க வேண்டாம் எனவும் அழுத்தம் கொடுத்துள்ளார்.
மடகாஸ்கர் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அங்கு பிரெஞ்சு மொழியில் வழக்கு விசாரணைகள் நடத்தப்படுகின்றன. “இந்த நிலையில், எங்கள் மீனவர்கள் சிங்கள மொழி பேசுவதால், சிங்கள மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் இல்லாததால் நேற்று (ஜூலை 22) நடைபெற்ற வழக்கு ஆகஸ்ட் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த மேலும் தெரிவித்தார்.

