என்னிடம் இனிமேலும் ஊடக பணியில் ஈடுபடுவதற்கான வலுஇல்லை, எனது உடல் மெலிந்து விட்டது

75 0

காசாவில் எஞ்சியுள்ள ஊடகவியலாளர்கள் மரணிக்கும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என ஏஎவ்பி ஊடகவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உடனடிதலையீடு இல்லாவிட்டால் காசாவில் இறுதியாக உள்ள ஊடகவியலாளர்கள் உயிரிழப்பார்கள்  என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

யுத்தத்தின் கோரபிடியில் சிக்குண்டுள்ள காசாவிற்கு வெளிநாட்டு பத்திரிகையாளர்கள்  செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி மறுத்து வரும் நிலையில் ரொய்ட்டர்ஸ் ஏஎவ்பி போன்ற நிறுவனங்கள் காசாவில் உள்ள உள்ளுர் பத்திரிகையாளர்களையே செய்திக்காக நம்பியுள்ளன.

21 மாதமோதலில் 60000 பேர் உயிரிழந்துள்ள காசாவில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு மற்றும் பட்டினி போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காசாவில் ஊடகவியலாளர்களின் நிலை குறித்து ஏஎவ்பியின் ஊடகவியலாளர்கள் குழுவொன்று பலவிடயங்களை தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள மோசமான நிலை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் அங்குள்ள சுயாதீன செய்தியாளர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல மாதங்களாக அவர்களின் வாழ்க்கை மிக மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருப்பதை நாங்கள் வேறுவழியின்றி பார்த்துக்கொண்டிருந்தோம் என ஏஎவ்பி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

அவர்களிடம் துணிச்சல்,தொழில்முறை அர்ப்பணிப்பு,மீள் எழுச்சி தன்மை இருந்தபோதிலும் அவர்களின் நிலைமை தற்போது தாங்க முடியாததாக மாறியுள்ளது என ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

என்னிடம் இனிமேலும் ஊடக பணியில் ஈடுபடுவதற்கான வலுஇல்லை,எனது உடல் மெலிந்து விட்டது  என்னால் முடியவில்லை என காசாவில் உள்ள ஏஎவ்பியின் புகைப்படப்பிடிப்பாளர் பசார் சமூக ஊடக செய்தியொன்றை பதிவு செய்துள்ளார்.

பசார் 2010 முதல் ஏஎவ்பிக்காக பணியாற்றிவருகின்றார்,கடந்த பெப்ரவரி முதல் அவர் தனது குடும்பத்தவர்களுடன்  இடிந்த வீட்டில் வசித்து வருகின்றார்.தனது சகோதரர் ஒருவர் பட்டினியால் உயிரிழந்துவிட்டார் என அவர் தெரிவித்தார் என ஊடகவியலாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

 

பத்திரிகையாளர்கள் ஏஎவ்பியிடமிருந்து மாத சம்பளம் பெறுகிறார்கள் ஆனால் விலை அதிகரிப்பினால் அவர்கள் போதியளவு உணவுப்பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.

மற்றொரு ஏஎவ்பி  ஊழியரான அஹ்லம் ஒரு நிகழ்வைச் செய்தி சேகரிக்க அல்லது ஒரு நேர்காணலைச் செய்ய தனது தங்குமிடத்தை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும் “நான் உயிருடன் திரும்பி வருவேனா என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார். உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறைதான் அவரது மிகப்பெரிய பிரச்சினை என்று அவர் கூறினார்.

1944 ஆம் ஆண்டு  ஏஎவ்பி நிறுவப்பட்டதிலிருந்து “நாங்கள் மோதல்களில் பத்திரிகையாளர்களை இழந்துள்ளோம் சிலர் காயமடைந்துள்ளனர் மற்றவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எங்களில் யாரும் சக ஊழியர்கள் பசியால் இறப்பதைப் பார்த்ததை நினைவில் கொள்ள முடியாது” என்று .ஏஎவ்பியின் ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அவர்கள் இறப்பதைப் பார்க்க நாங்கள் மறுக்கிறோம்”  என்று .ஏஎவ்பியின் ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

2024 இல் காசாவிலிருந்து அதன் ஊடகவியலாளர்கள் வெளியேறியதிலிருந்து ஏஎவ்பி சுயாதீன ஊடகவியலாளர் மூன்று படப்பிடிப்பாளர்கள் ஆறு சுயாதீன வீடியோபடப்பிடிப்பாளர்களுடன் காசாவில் பணிபுரிகின்றது. ஏபி ரொய்ட்டரின் ஊடகவியலாளர்களும் தங்களின் காசா சகாக்களின் நிலை குறித்து கரிசனை வெளியிட்டுள்ளனர்

காசாவில் உள்ள எங்கள் ஊழியர்களைப் பற்றி நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம் மேலும் அவர்களுக்கு ஆதரவளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்” என்று அசோசியேட்டட் பிரஸ்ஸின் செய்தித் தொடர்பாளர் லாரன் ஈஸ்டன் கூறினார். “தரையில் என்ன நடக்கிறது என்பது குறித்து உலகிற்குத் தெரியப்படுத்த எங்கள் குழு தொடர்ந்து செய்து வரும் பணி குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.