ரொஹான் பிரேமரத்னவை கைதுசெய்ய அவசியமில்லை – இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு

74 0

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ரொஹான் பிரேமரத்னவை கைதுசெய்ய அவசியமில்லை என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை தெரிவித்துள்ளனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ரொஹான் பிரேமரத்ன அண்மையில் நீதிமன்றில் முன் பிணை மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த முன் பிணை மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜரான இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள், ரொஹான் பிரேமரத்னவை கைதுசெய்ய அவசியமில்லை என தெரிவித்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்ட நீதவான், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ரொஹான் பிரேமரத்னவை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்குச் சென்று குறித்த விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.