பாணந்துறை துப்பாக்கிச் சூடு ; மலேசியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றவர் கட்டுநாயக்கவில் கைது!

75 0

பாணந்துறை – ஹிரண, மாலமுல்ல பிரதேசத்தில் கடந்த 11 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மலேசியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (22) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பாணந்துறை – ஹிரண, மாலமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்  பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “குடு சலிந்து” என்பவரின் சகா என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மலேசியாவுக்கு தப்பிச் செல்வதற்காக இன்றைய தினம் காலை 10.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது 28 வயதுடைய சந்தேக நபர் விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.