பதவிகளுக்கான நியமனத்திற்கு தகுதியானவர்களை பரிந்துரைக்க வேண்டும் !

82 0

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொள்ளும்போது அதனுடன் தொடர்புடைய விடய அறிவு, அனுபவம் மற்றும் தேர்ச்சி என்பவற்றைக்கொண்ட நபர்களை மாத்திரம் பரிந்துரைக்குமாறும், இந்நியமனங்களின்போது ஜனாதிபதி உரிய அளவுகோள்களைப் பின்பற்றவேண்டும் எனவும் சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரிகள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், பேராசிரியர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், தொழிற்சங்கவாதிகள் 117 பேர் அரசியலமைப்புப்பேரவையிடமும், ஜனாதிபதியிடமும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். 

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கான தவிசாளர் நியமனப் பரிந்துரை தொடர்பில் அவ்வாணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் எஸ்.ஜி.புஞ்சிஹேவா, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சுவஸ்திகா அருலிங்கம், சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய, கலாநிதி லயனல் போபகே ஆகியோர் உள்ளடங்கலாக சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரிகள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், பேராசிரியர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், தொழிற்சங்கவாதிகள் என 117 பேர் கையெழுத்திட்டு அரசியலமைப்புப்பேரவைக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

அக்கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியிருப்பதாவது:

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தவிசாளராக பொருத்தமானதொரு நபரைப் பரிந்துரைப்பதற்கு அரசியலமைப்புப்பேரவை தயாராக இருக்கிறது. அதேவேளை அவ்வாணைக்குழுவுக்கு தகுதியான நபரொருவர் நியமிக்கப்படுகிறாரா என்பது பற்றிய சமூகக்கலந்துரையாடல் ஒன்றும் உருவாகியிருக்கிறது.

அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளவாறு தகவல்கோரல் உரிமையை பயன்படுத்துவதற்கும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றுடன்கூடிய கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்குமான பணி தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படுவதனால், தவிசாளர் நியமனத்தின்போது இவ்விடயங்கள் கருத்திற்கொள்ளப்படவேண்டியது அவசியமாகும்.

அதேவேளை மேற்படி நியமனத்தின்போது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் 12(2)(அ)(1) உபபிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளுக்கு மேலதிகமாக, குறித்த நபர் பொதுவாழ்க்கையில் மனித உரிமைகளை முன்னிலைப்படுத்துபவராகவும், ஜனநாயக நடைமுறைகளைக் கடைப்பிடிப்பவராகவும் இருப்பது மிகமுக்கியமாகும்.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘அரகலய’ போராட்டத்தின்போது சுட்டிக்காட்டப்பட்டவாறும், கடந்த ஆண்டு நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தேர்தல்களில் உறுதிப்படுத்தப்பட்டவாறும் பொதுமக்கள் பாரிய அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர்.

எனவே இவ்விடயத்தில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை உறுதிசெய்யும் வகையில், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொள்ளும்போது அதனுடன் தொடர்புடைய விடய அறிவு, அனுபவம் மற்றும் தேர்ச்சி என்பவற்றைக்கொண்ட நபர்களை மாத்திரம் பரிந்துரைக்குமாறும், இந்நியமனங்களின்போது ஜனாதிபதியும் மேற்படி அளவுகோள்களைப் பின்பற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.