அநுராதபுரம்-கெக்கிராவ பகுதியில் அமைந்துள்ள ஒளுகறந்த குளத்துப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருந்த மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
தம்புள்ளை முகாமை சேர்ந்த விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை (20) மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து பெருமளவான சட்டவிரோத மதுபானத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கெக்கிராவ பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவினர் பல கோணங்களிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் கெக்கிராவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

