நுவரெலியாவில் பலத்த மழை ; கிரகரி வாவியில் மட்டுப்படுத்தப்பட்ட படகுச் சவாரி

74 0

நுவரெலியாவில் பெய்துவரும் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக கிரகரி வாவியில் இடைநிறுத்தப்பட்டிருந்த படகுச் சவாரி இன்று (21) மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையினை வழங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் நுவரெலியா கிரகரி வாவியில் படகுச் சவாரியானது சனி (19), ஞாயிறு (20) ஆகிய இரு தினங்களும் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, மீண்டும் இன்று காலை காற்றின் வேகம் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், ஒரு சில படகுகளுக்கு மாத்திரம் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி கிரகரி வாவியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரித்ததால் சுற்றுலாப்பயணிகளின் வருகை சற்று குறைந்துள்ளது.

மேலும், சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி, மிதி படகுகள் இயக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாவி பகுதியில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவி வருகிறது.  அத்துடன் மழையால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.