​முன்னாள் DIG ரொஹானின் வீட்டிற்கு ஆணைக்குழு அதிகாரிகள் செல்லவில்லை

80 0

75 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் (ஓய்வு) ரொஹான் பிரேமரத்னவின் வீட்டிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதுவரை செல்லவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ரொஹான் பிரேமரத்னவின் வீட்டிற்குள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நுழைந்ததாகவும், அவர் தங்கியிருந்த பல இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும் வெளியான ஊடக அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், தான் இன்னும் வீட்டிலேயே இருப்பதாக குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டு தெஹிவளை பகுதியில் நைஜீரிய பிரஜைகள் உள்ளிட்ட குழுவொன்று கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த வௌிநாட்டு குழுவினர் சம்பாதித்தாக கூறப்படும் சுமார் 75 இலட்சம் ரூபா பணத்தை களனி வலய குற்றத் தடுப்பு பிரிவினர் வழக்கின் ஆதாரமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது ரொஹான் பிரேமரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.