உள்ளூர் ஆட்சி மன்ற கதிரைகள் நிரப்பி முடிந்த நிலையில் இனியாவது மக்களுக்காக அரசியல் கூட்டை தவிர்த்து கொள்கை ரீதியான கூட்டுக்கு தமிழரசு கட்சி வர வேண்டுமென அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்தார்.
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை (19) ஊடகவியலாளர்களுடன் சமகால விடயம் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என விரும்பினோம் அதற்காக பல விட்டுக்கொடுப்புகளையும் மேற்கொண்டோம்.
ஆனால் துரதிஷ்டம் தமிழரசு கட்சி அதனை ஏற்க அதன் நிலையில் அறுதிப் பெரும்பான்மையுடன் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை எந்த ஒரு கட்சியும் உறுதிப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. நாங்கள் உள்ளூராட்சி மன்றங்களில் கதிரைகளுக்காக யாருடனும் சண்டை பிடித்தது கிடையாது.
தமிழரசு கட்சிக்கு, நீங்கள் பெரும்பான்மை பெற்ற சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு நாம் ஆதரவை வழங்குவோம் அதையும் தாண்டி தேவை ஏற்பட்டால் வேறு சபைகளிலும் ஆட்சி அமைக்க விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்வோம் என பகிரங்கமாக கூறினோம்.
ஆனாலும் தமிழரசு கட்சியை அதை பொருட்படுத்தாது ஒன்றிணைவுக்கு மறுத்த நிலையில் தமிழ் மக்கள் பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் நாம் பல சபைகளில் ஒன்று இணைந்து ஆட்சி அமைத்தோம்.
இந்த இணைவு தொடர வேண்டும் என்பதே எனது நிலைப்பாட இருக்கின்ற நிலையில் அரசியல் நீதியான இணக்கப்பாட்டினை தாண்டி தமிழ் மக்களின் கொள்கைக்கான ஒரு இணக்கப்பாடாக தமிழரசு கட்சியும் இணைந்து கொள்ள வேண்டும்.
தமிழரசின் பதில் தலைவர் சி வி கே சிவஞானத்தை நான் தேடி சென்று ஓராணியில் செயல்படுவதற்காகன அழைப்பை விடுத்த போது வர இருக்கின்ற ஏக்கிய ராஜ்சிய ஒற்றையாட்ச்சி அரசியலமைப்பை தான் நிராகரிப்பதாக தெரிவித்தார்.
ஆனால் அதன் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வழங்கிய போதும் உள்ளூராட்சி மன்ற ஒற்றுமை கூட்டுக்குள் அவர்கள் வரவில்லை.
அப்போது தன் தமிழரசு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார் ஏக்கிய ராஜ்ய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் தமிழரசு கட்சிக்கு அதிக பங்கு இருந்தது.
நீங்கள் உள்ளூராட்சி இணைக்கப்பாட்டில் ஏக்கிய ராஜ்யவை நிராகரிப்போம் என கூறிய நிலையில் நாங்கள் கொண்டு வந்ததை நாங்களே வேண்டாம் என கையெழுத்து வடுவதா என்ற குழப்பத்தில் நிராகரித்து இருக்கக் கூடும் என தெரிவித்தார்.
அப்போது நான் தெரிவித்தேன் சரி பரவாயில்லை இணக்கப்பாட்டுக்கு வாருங்கள் ஏதாவது இரகசியமான முறையில் சில விடயங்களை பாதுகாக்க வேண்டுமானாலும் அதை நான் செய்வதற்கு தயாராக இருக்கிறேன் வாருங்கள் என்றேன் வரவில்லை.
மீண்டும் தமிழரசு கட்சிக்கு அழைப்பு விடுவதற்கான காரணம் தனியாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
தமிழ் மக்கள் இறுதி யுத்தத்தில் இடம் பெற்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போர் குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணையை கோரி ஜெனிவாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் ஜெனிவாவில் நமது பிரச்சனை குறுக்கப்பட்டு உள்ளக விசாரணையில் நீதியை பெறுவதற்கான அழுத்தங்கள் பிரியோகிக்கப்பட்டு வருகிறது.
இவற்றை நாம் சரி செய்ய வேண்டுமானால் எல்லோரும் ஒரணியாக நின்று எமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் மூடி மறைக்கப்பட்ட செம்மணி விவகாரம் இனப்படுகொலை இடம்பெற்றதற்கான ஆதாரங்களை முன்வைத்த வண்ணம் இருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் 15 பேர் மட்டும் கொல்லப்பட்டதாக மூடி மறைக்கப்பட்ட செம்மணி தமிழினத்திற்கு 2009 க்கு முன்னர் இனப்படுகொலை செய்ததற்கான தொடர்ச்சியான ஆதாரங்களை தந்து கொண்டிருக்கிறது.
இந்த செம்மணி விவகாரத்தை தனியாக விட்டுச் செல்ல முடியாது யுத்தத்துக்கு பின்னர் இடம்பெற்ற இனப்படுகொலைகள் மனித குலத்துக்கு எதிரான கொடூரங்கள் ஐநாவில் பாரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் செம்ணியையும் இணைத்து சர்வதேச நீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
இதனை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு தமிழ் மக்களுக்காக ஓரணியில் பயணிக்கின்ற ஒரு கொள்கையின் கீழ் ஒன்று படக்கூடிய கட்சிகளை இணைத்து பயணிப்பதே எமது சர்வதேசத்துடனான போராட்டத்தை வலுப்படுத்தும்.
தமிழரசு கட்சி எம்மோடு இணைந்து பணியாற்றுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பது தொடர்பில் வெளிப்படையாக கேட்க விரும்புகிறேன்.
நாங்கள் ஒரு ஆசனத்தை கொண்ட கட்சி தமிழரசு கட்சி அதிக ஆசனங்களை பாராளுமன்றத்தில் கொண்டிருக்கின்ற நிலையில் பலமானவர்கள் தமிழரசு கட்சி.
நாங்கள் அவர்களை மலினபடுத்த முடியாது அவ்வாறு செய்ய வேண்டிய நோக்கமும் இல்லை ஆனால் ஏனைய தமிழ் கட்சிகள் ஒற்றுமைக்கு வரும்போது தமிழரசு மறுப்பது ஏன் ?
இதற்கு இரண்டு வழிகள் தான் இருக்கிறது ஒன்று தமிழரசு கட்சி கொள்கை ரீதியில் சக தமிழ் கட்சிகளின் கூட்டில் இணைய மறுத்தால் அவர்களை விட்டு ஏனையவர்களுடன் ஒன்றிணைந்து பயணிப்பது.
அல்லது தமிழ் மக்களிடம் தமிழரசு கட்சி தொடர்பில் எமது நிலைப்பாட்டை கூறி மக்களாக அவர்களை இணைவதற்கான அழுத்தங்களை மேற்கொள்வது.
இதையே நான் கூறுகிறேன் என்றால் எனது அரசியல் அறிவுக்கு எட்டிய வகையில் பாராளுமன்றத்தில் ஒற்றை ஆட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்படப் போகிறது.
சிலர் கூறலாம் அது நிறைவேற்றப்படும் போது பார்க்கலாம் என இந்த ஆபத்து அவர்களுக்கு புரியாமல் இருக்கக்கூடும்.
தமிழ் கட்சிகளின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கினால் போதும் ஒற்றை ஆட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதாக சர்வதேச சமூகம் முன் இலங்கை அரசு பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.
இதனை நான் ஒருவராக பாராளுமன்றத்தில் செய்து வட முடியாது. ஆக குறைந்தது பத்துக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்க்க வேண்டும் இல்லையேல் ஒற்றை ஆட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் ஆபத்து உள்ளது.
ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழ் மக்களுடைய பிரச்சனையை ஓரணியில் நின்றோ அல்லது எதிரணியில் நின்றோ பேசி பயன்கிட்ட போவதில்லை.
ஆகவே தமிழரசு கட்சிக்கு மீண்டும் அழைப்பு விடுகிறேன் உள்ளூர் ஆட்சி மன்ற கதிரைகள் நிரப்பப்பட்டுள்ளது இனியாவது தமிழ் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

