கலைத்தாயின் கரம்பிடித்து நடந்த ஒரு மகத்தான கலைஞனுக்கு இதயவணக்கம்- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி.

232 0

மிருதங்க வித்துவான் சங்கீத ரத்னம், லயஞான குமாரன்
அமரர். திரு. சண்முகரத்தினம் பிரணவநாதன் அவர்கள்.

தாயகத்தில்: டச்சுவீதி, உடுவில், யாழ்ப்பாணம் – தமிழீழம்.

வாழ்விடம்: வூப்பெற்றால், யேர்மனி.

கலைத்தாயின் கரம்பிடித்து நடந்த ஒரு மகத்தான கலைஞனை இயற்கை இறுகப் பற்றிக்கொண்டு, தன்வசமாக்கிய செய்தியறிந்து கலையுலக உறவுகள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த உயிரினங்களும் ஆழ்மனக் கவலை கொண்டிருக்கும் என்பதிலே ஐயமில்லை. மிருதங்கம் எழுப்புகின்ற நாத ஒலியின் வசீகர வீச்சினையே தன் அசைவியக்கத்தின் மூச்சாகக் கொண்டு உலகப் புகழ்பெற்றுத் துலங்கி, இன்று அமைதிபெற்று உறங்கும் இந்த அற்புதமான மனிதரைத் தமிழின வரலாறு தாங்கிக் கொள்ளும்.

பரம்பரைத் தொடர்ச்சியிலே பாரம்பரிய பண்பாட்டுக் கலையினைத் தாங்கிச் சுமந்து, தாயகத்திலே மாத்திரமல்ல உலகின் எல்லாப் பாகங்களிலும் அதிலும் குறிப்பாக ஐரோப்பியக் கண்டத்தின் யேர்மனிய தேசமதில் உயிரிழைத் தொடர்ச்சி பேணிய வித்துவச் சிறப்பின் முத்தான மனிதர். ஈழமணித் திருநாடு தந்த இணையற்ற இசைக்குடும்பத்தின் வாரிசானாலும், இன்று உலகெல்லாம் வாழும் இசைதாங்கும் இதயங்களின் வாரிசாக வாழத் தொடங்கியுள்ளார்.

ஏற்றத் தாழ்வற்று ஒவ்வொருவரையும் பேரன்புகொண்டு நேசிப்பது, பொறுமைக்கும், பண்புக்கும், நேர்மைக்கும் இலக்கணமாகத் திகழ்வது, பெற்றோர் வழிவந்து பெற்ற கலைவாழ்வைப் போற்றுவது இவையாவையும் ஒன்றுதிரட்டிய வடிவமாக, எல்லோராலும் விரும்பி வேண்டப்படுகின்ற உயர்ந்த மனிதர். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு மிருதங்கக் கற்கை நெறிகளை விதைத்து நெறிப்படுத்திய பேராளன். பயின்ற மாணவர்களிலே பக்குவப்பட்டவர்களின் அகப்புறத் தகைசார் நிலையறிந்து அவர்களை அரங்கேற்றி, அடுத்த இலக்குநோக்கி அடையாளத் திலகமிட்டு வழிகாட்டியவர்.

இசைமன்னன் என அழைக்கப்படும் பாடகர்,இசைப்புலவர் சண்முகரத்தினம் அவர்களுக்கும், இசை ஆசிரியையான ஜெயலஷ்மி அவர்களுக்கும் அன்பு மகனாகப் பிறந்த பிரணவநாதன் அவர்கள், பின்நாளிலே தந்தையின் பாடலுக்கும், தந்தைக்கு இணையாகப் பாடலிசைக்கும் தனது அன்புச் சகோதரன் சண்முகராகவனின் பாடலுக்கும் அணிசேர் கலைஞனாக மிருதங்க இசைதந்த மேதை. இவரது மற்றுமோர் சகோதரி கலைமாமணிப் பட்டம் பெற்றிருந்தார். கலைத்தாயின் நல்லாசிகளைப் பெற்ற குடும்பத்தின் பேறாகி மிளிர்ந்தவர், தனக்குப் பின்னும் அதன் தொடர்ச்சியைப் பேணத் தனது அன்பு மகனை மிருதங்க வித்துவானாகப் புடம்போட்டு சமூகப்பரப்பிற்கு உவந்தளித்துள்ளார்.

கலையையும் பண்பாட்டையும் நேசிக்கும் அதே பக்குவத்திலே, தமிழீழ தேசத்தையும், அதற்கான விடுதலைப் போராட்டத்தையும், போராட்டத்தின் தலைமைத்துவத்தையும் இறுகப் பற்றி நேசித்தார். யேர்மனிய கலைபண்பாட்டுக் கழக மிருதங்க நல்லாசிரியராக நீண்டகால உழைப்பின் பிரகாரம் துறைசார்ந்த பேராதரவை நல்கினார். ஈழவிடுதலைக்கான ஆதரவுச் செல்நெறியிலே யேர்மனிய தேசவாழ் எமது புலம்பெயர் மக்களின் மையத்திலே அதிர்ந்த பெரும்பான்மையான கலைக் களங்களிலே இவரது மிருதங்க வித்துவம் பெருந்துணையாக அமைந்தது. இதன் பெருஞ்சான்றும் முத்திரையுமாக மக்கள் மனங்களிலே உயிர்ப்போடு இருப்பது, தமிழீழத் தேசியத் தலைவரது பாராட்டுதலுக்கும், விருப்புக்குமுரியதாக அமைந்த வரலாற்றுப் புகழ்மிக்க “புலிகளின் புரட்சி இசைவிழா ” என்றால் மிகையாகாது. இவற்றோடு மேலும் பற்பல அரங்குகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஒழுங்கமைப்பிற்கு உட்பட்ட அரங்குகளென நீண்டு செல்லும்.

அதிரும் அரங்குகளுக்குத் தன் அற்புதமான மிருதங்க வாசிப்பினால் உயிரும், உரமும் ஊட்டிய ஈழமண்ணின் வரலாற்றுப் பெட்டகமாகத் திகழ்ந்து, அமைதிகொள்ளும் மதிப்பார்ந்த இந்த மனிதரை மிருதங்க இசை மாமணியாக, மிருதங்கச் சக்கரவர்த்தியாக இன்னும் பல்வேறு மதிப்புத் தகமையூடாக வளர்ந்துவரும் இளந்தலைமுறையினரும் தங்கள் இதயப்பரப்பிலே தாங்கிக் கொள்வார்கள்.

விழித்திருந்து காவல் புரிந்து விரலால் வில்லழுத்தி, துப்பாக்கியின் மொழிதான் துல்லியம் புரியுமென, எதிரியின் வரவுகளைத் தடுத்தாண்ட வீரப்போராளிகளுக்குப் பலம்சேர்க்க, தமிழீழப் பெருங்கனவை நெஞ்சிலே சுமந்து, புலம்பெயர் தேசமெங்கிலும் தன் விரலழுத்திப் பெரும்பங்காற்றிய இத்தூய மனிதரைத் தேசம் மறவாது. உறக்கம் கொள்ளும் வித்துடல் தழுவிச் சொல்கிறோம் என்றும் உறங்காத நாதமாய்ப் “பிணவ நாதம்” பூமிப்பந்தெங்கிலும் வாழும் ஈழத்தமிழர் இதயச்சுவரெங்கிலும் ஒலித்தபடியே இருக்கும். இவரது பிரிவுத்துயர் சுமந்து வாடும் குடும்ப,மற்றும் உறவுகளோடு நாமும் துயரினைப் பகிர்ந்து தேற்றுதலளிப்பதோடு, இவரது நினைவுகளைத் தாங்கியபடி எமக்கான தேசப்பணியைத் தொடர்வோமென உறுதிகொள்வோமாக.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.