தங்கநகர் பொர்ஸ்கைம் தமிழாலயத்தின் வெள்ளிவிழா.

185 0

பொர்ஸ்கைம் தமிழாலயம் கால்நூற்றாண்டைக் கடந்து நிமிரும் காலத்தைப் பதிவு செய்யும் வகையில் வெள்ளிவிழாவைக் கடந்த 13.07.2025 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடியது.
காலை 10:00 மணிக்குத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றி விழாவைத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து தமிழினத்தின் மரபு தழுவிச் சிறப்பு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட அரங்கிலே இயற்கை எய்திவிட்ட ஆசிரியரும் உதவி நிருவாகியுமான காலஞ்சென்ற சுந்தரம் நடேசலிங்கம் அன்னாருக்கு அகமேந்தி வணக்கம் செய்யப்பட்டது. வணக்க நிகழ்விலே ஈகைச்சுடரினை முன்னாள் நிருவாகியான திரு. நாகலிங்கம் மகாலிங்கம் ஏற்றி வைத்தார். அவரது திருவுருவப்படத்துக்கு அன்னாரின் துணைவியார் திருமதி விமலாதேவி நடேசலிங்கம் மற்றும் மகள் திருமதி நவீனா வினோத் ஆகியோர் மலர்மாலையை அணிவித்து வணங்கியதைத் தொடர்ந்து மலர் மற்றும் சுடர் வணக்கம் இடம்பெற்றது.

நினைவு வணக்க நிகழ்வு நிறைவுறத் தமிழாலயத்தின் வெள்ளிவிழா காலஞ்சென்ற சுந்தரம் நடேசலிங்கம் நினைவரங்கிலே, மங்கல விளக்கேற்றலோடு அணியமாகியது. பொர்ஸ்கைம் சிறீ நாகபூசணி அம்மன் கோவில் குரு முருகையா சுப்பிரமணியம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், பொர்ஸ்கைம் இளையோர் மைய நிருவாகி திரு. பெட்றோ ரிறைக் காற்சி, தொடருந்துப் பணியாளர் விளையாட்டுக் கழகத் தலைவர் திரு. யோகான் லுட்விக், தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு. செல்லையா லோகானந்தம், கல்வி மற்றும் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜ. மனோகரன், கலைப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்மாணி” திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி, தமிழ்ப் பெண்கள் அமைப்புப் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், பொர்ஸ்கைம் கோட்டப் பொறுப்பாளரும் தமிழாலயத்தின் நிதிப்பிரிவுச் செயற்பாட்டாளருமான திரு. சின்னையா மகேஸ்வரன், தமிழாலய நிருவாகி திருமதி மோகனராஜி பிரதீபன் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றிவைத்தனர்.
அகவணக்கம், தமிழாலயப்பண் என்பவற்றையடுத்துத் தமிழாலய நிருவாகி திருமதி மோகனராஜி பிரதீபன் அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது. கலை நிகழ்வுகளும் மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. தாயகத்தைப் பதிவு செய்யும் வகையிற் சிறப்பாக அமைக்கப்பட்ட தற்காலிக அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. அருங்காட்சியகம் பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழாலய ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பைத் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் வாழ்த்தி வழங்கி வைத்தார். வெள்ளிவிழாவினைச் சிறப்பிக்கும் வகையிற் சிறப்புமலர் வெளியிடப்பட்டது. பெற்றோர்கள் ஒளியேந்திப் புடைசூழ்ந்து பண்ணிசையோடு பவனியாக அரங்கிற்கு எடுத்து வந்த சிறப்பு மலரைப் பரப்புரைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் தீபன் வெளியிட்டு வைத்தார். முதற்பிரதியைத் திரு. தாமோதரம்பிள்ளை பவானிசங்கர் பெற்றுக்கொண்டார். கலைப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்மாணி ” திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி வெளியீட்டுரையாற்றினார். சிறப்பு விருந்தினர் மற்றும் தமிழாலயப் பெற்றோர்களுக்கும் நிருவாகியால் சிறப்பு மலர் வழங்கப்பட்டது. தமிழாலயத்துக்குத் தமிழ் மற்றும் கலைத்திறனால் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு மதிப்பளிப்புகள் இடம்பெற்றன. கல்வி மற்றும் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜ. மனோகரன், கல்விப் பிரிவுத் துணைப் பொறுப்பாளர் திரு. ராமேஸ் ஜெயக்குமார், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் ஆகியோரின் வாழ்த்துரை மற்றும் சிறப்புரை என்பனவும் இடம்பெற்றன.

தமிழ்க் கல்விக் கழகத்தின் பிரிவுசார் பொறுப்பாளர்கள், துணைப்பொறுப்பாளர்கள், மாநிலச் செயற்பாட்டாளர், மாநிலத் துணைச் செயற்பாட்டாளர், முன்னாள் நிருவாகிகள், முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பியர் என ஒன்றுகூடி வெள்ளிவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்ததோடு, தமிழீழத் தாகம் சுமந்து தாயக விடியலின் நம்பிக்கையை இசைத்தவாறு நிறைவுற்றது.