பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் நடவடிக்கைகளில் இருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படயினரை வெளியேற்றுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா? அல்லது இரத்துச்செய்வதா? என்பது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பாதாள உலகப்புள்ளி ”மிதிகம ருவன்” என அழைக்கப்படும் ஜே.ஏ. ருவன் குமார என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்று வியாழக்கிழமை (17) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பூஸா சிறைச்சாலை நாட்டில் உள்ள அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மனுதாரர் தரப்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி, அதன் உள்ளக மற்றும் வெளியக செயற்பாடுகளுக்காக பொலிஸ் விசேட அதிரப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
சிறைச்சாலை ஆணையர் நாயகமே குறித்த சிறைச்சாலையை அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையாக அறிவித்துள்ளதாக தெரிவித்த சட்டத்தரணி, சிறைச்சாலைகள் சட்டத்தின் கீழ் இத்தகைய உத்தரவைப் பிறப்பிக்க சிறைச்சாலை ஆணையர் நாயகத்துக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என வாதிட்டார்.
இத்தகைய அறிவிப்பை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரினால் மாத்திரமே பிறப்பிக்க முடியும் என சுட்டிக்காட்டிய அவர், சிறைச்சாலையின் உள்ளக விடயங்களுக்கு பொலிஸ் விசேட அதிரப்படையினரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளமை சட்டத்துக்கு முரணானது என குறிப்பிட்டார்.
சிறைச்சாலையின் உள்ளக விடயங்களை சிறைச்சாலை அதிகாரிகளே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும் சிறைச்சாலைக்குள் சோதனை நடவடிக்கைகள் மற்றும் விசேட தேடுதல் நடவடிக்கைகளுக்கு பொலிஸ் விசேட அதிரப்படையினர் ஈடுபடுத்தப்படுவதால் சிறைக்கைதிகள் கடுமையாகவும் மனிதாபிமானற்ற முறையிலும் நடத்தப்படுவதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய சம்பந்தப்பட்ட சிறைச்சாலையில் உள்ளக விவகாரங்களுக்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை பயன்படுத்துவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷானில் குலரத்ன இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
சிறைச்சாலைச் சட்டத்தின் பிரிவு 77(5) இன் படி சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கு பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிகளின் உதவியைப் பெற முடியும் என சுட்டிக்காட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்,பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பொலிஸ் திணைக்களத்தின் ஒரு பிரிவாக இருப்பதால் அவர்களை அந்த நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை குறிப்பிட்டார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது மனுதாரரிடம் இருந்து கைத்தொலைபேசி மீட்கப்பட்டிருந்தாக சுட்டிக்காட்டிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், சிறைச்சாலைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரப்படையனரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ள படுவதாகவும் குறிப்பிட்டார்.
சிறைச்சாலைக்குள் கைத்தொலைபேசிகள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், பூஸா சிறைச்சாலையை தொலைபேசிகளை சுதந்திரமாகப் பயன்படுத்தி குற்றங்களை ஒருங்கிணைக்கும் மையமாக மாற்றும் நோக்கில் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
பரிசுத்தமான கரங்களுடன் மனுதாரர் இந்த மனுவை சமர்ப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெரனல், இந்த மனுவை விசாரிப்பதற்கான நியாயமான சட்ட ஏற்பாடுகள் இல்லை என்பதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
முன்வைக்கப்பட்ட இரு தரப்பு வாதங்களை கருத்திற்கொண்ட நீதிபதிகள் குழாம் இந்த வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை ஆகஸ்ட் 25 ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதி தரப்பு மற்றும் மனுதாரர் தரப்புக்கு உத்தரவு விட்டது.
இதற்கமைய இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா அல்லது இரத்துச்செய்வதா என்பது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

