அமெரிக்க ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டுள்ள 30 வீத தீர்வை வரி ஏற்கனவே எங்களுக்கு இருந்த வரியைவிட மூன்று மடங்கு அதிகரிப்பாகும். அதனால் இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு இதனை மேலும் குறைத்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எமது ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் வீழ்ச்சியடையும் அபாயம் இருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
அமெரிக்க ஜனாபதியினால் எமக்கு அதிகரிக்கப்பட்டிருந்த 44 வீத தீர்வை வரியை 30 வீீதமாக குறைத்துக்கொள்ள அரரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள இலங்கைக்கான வதிவிட பிரதி மஹிந்த சமரசிங்க, அவருக்கு இருக்கும் அனுபவம் மற்றும் தொடர்புகள் காரணமாகவே இந்தளவேனும் அரசாங்கத்துக்கு குறைத்துக்கொள்ள முடியுமாகி இருக்கிறது.
என்றாலும் இந்த தொகையும் எம்மை பொறுத்தவரை அதிகமாகும். ஏனெனில் எமக்கு அமெரிக்க சந்தைப்போட்டியாக இருக்கும் வியட்நாம். இந்தியா போன்ற நாடுகளுக்கு எம்மைவிட குறைந்த வரி தொகையே விதித்திருக்கிறது.
அத்துடன் அரசாங்கம் இந்த வரி தொகையை மேலும் குறைத்துக்கொள்வதற்கான கலந்துரையாடுவதற்கு மீண்டும் ஒழுவொன்றை அமெரிக்காவுக்கு அனுப்ப தீர்மானித்திருக்கிறது.ஆனால் அமெரிக்காவில் யாருடன் கலந்துரையாடுவது என்று,திட்டமிடலுடனே செல்ல வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் அங்குள்ள வர்த்தக ஆணையாளர் போன்று சாதாரண அதிகாரிகளுடன் கலந்துரையாடி, எமது இலக்கை அடைந்துகொள்ள முடியும் என நாங்கள் நினைக்கவில்லை. இந்தியா இராஜதந்திர ரீதியில் செயற்பட்டே வரி குறைப்பை பெற்றுக்கொண்டுள்ளது. அவ்வாறான முறையொன்றையே அரசாங்கமும் கையாள வேண்டும்.
அதேநேரம் 30 வீத வரி என்பது ஏற்கனவே இருந்த வரியைவிட மூன்று மடங்கு அதிகமாகும். இவ்வாறான நிலையில் , நாங்கள் அமெரிக்காவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யும் ஆடை உற்பத்திகளின் விலையும் மூன்று மடங்கு அதிகரிக்கும். தற்போது அமெரிக்க சந்தையில் எமது டீடீ சேர் ஒன்று 100 டொலருக்கு விற்பனை செய்யப்படுமாக இருந்தால், இந்த வரி அதிகரிப்புக்கு பின்னர் அது 300 டொலர் வரை விலை அதிகரிக்கும். அவ்வாறான நிலையில் எமது ஆடை உற்பத்திகளின் கொள்வனவு குறையும். அப்போது ஏற்றுமதி வீதமும் குறைவடையும். இந்த நிலை தொடரும்போது ஆடை தொழிற்சாலைகளில் ஆடை உற்த்தியும் வீழ்ச்சியடையும். இறுதியில் தொழிலில்லாத பிரச்சினை ஏற்படும். ஆனால் அரசாங்கம் இதனை உணர்வதில்லை.
அமெரிக்காவுக்கான எமது ஏற்றுமதிகளில் நூற்றுக்கு 66வீதம் ஆடை ஏற்றுமதியாகும். இது பாதிக்கப்பட்டால் எமக்கான டொலர் வருமானம் குறைவடையும். டொலர் வருமானம் குறைவடையும் போது எமது கையிருப்பு குறைவடையும். கையிருப்பு குறைவடைந்தால், எமக்கு எரிபொருள், எரிவாயு என்பன கடனுக்கு பெற்றுக்கொள்ள முடியாமல்போகும்.
தற்போது எமது கையிருப்பு 6,1 பில்லியன் இருக்கிறது. அதனால் வெளிநாடுகள் எமக்கு கடனுக்கு பொருட்களை வழங்குகின்றன. இந்த கையிருப்பு குறைவடைந்தால் எந்த நாடும் எமக்கு கடனுக்கு பொருட்களை வழங்காது. அப்போது நாங்கள் பணம் செலுத்தியே அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிவரும்.
மேலும் அரசாங்கம் அடுத்த வருடம் மறுசீரமைக்கப்படாத கடனாக 4பில்லியன் டொலர் செலுத்த வேண்டி இருக்கிறது. அதேநேரம் இந்த வருடத்துக்கான அரசாங்கத்தின் வரி வருமான இலக்கு 21,195 பில்லியன் ரூபா. ஆனால் கடந்த 6 மாதங்களில் அரசாங்கத்துக்கு தனது இலக்கைவிட 120 பில்லியன் ரூபா குறைவடைந்துள்ளது.
இவ்வாறான நிலையில், அமெரிக்காவின் வரி அதிகரிப்பால் எமக்கு கிடைக்கும் டொலர் வருமானம் மேலும் குறைவடையும் போது வருட இறுதியாகும்போது, ஏற்படும் நெருக்கடிக்கு முகம்கொடுக்க அரசாங்கம் வரிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும். அதன்போது மக்கள் மீதே அதன் சுமை ஏற்றப்படும்.
அதனால் அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு அமெரிக்காவின் தீர்வை வரியை மேலும் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அது எமது ஆடை தொழிற்சாலைகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

