கஹவத்தை துப்பாக்கிச் சூடு ; “ஹோமாகம ஹந்தயா”வின் சகாக்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

74 0

இரத்தினபுரி, கஹவத்தை, யாயின்ன பகுதியில் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் இருவரை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு பெல்மடுல்ல நீதிமன்றம் இன்று புதன்கிழமை (15) உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட ஏனைய இரண்டு சந்தேக நபர்களையும் நாளை வியாழக்கிழமை (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரத்தினபுரி, கஹவத்தை, யாயின்ன பகுதிக்கு கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு 09.00 மணியளவில் சென்ற இனந்தெரியாத நால்வர், இளைஞர்கள் இருவரை ஜீப் வாகனத்தில் கொஸ்கெல்ல பிரதேசத்திற்கு கடத்திச் சென்று அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 27 வயதுடைய இளைஞன் ஒருவன் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து படுகாயமடைந்த இளைஞன் கஹவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த நால்வர் ஹோமாகம பிரதேசத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (15) மேல்மாகாண பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள்  நால்வரும் துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “ஹோமாகம ஹந்தயா” என்று அழைக்கப்படும் தனுஜ சம்பத் என்பவரின் சகாக்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நால்வரும் பெல்மடுல்ல நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.