கூமாங்குளம் வன்முறைதொடர்பில் இருவர் கைது

30 0

வவுனியா  கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் இருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (11) மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார்.

குறித்த மரணத்திற்கு அந்தபகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிஸாரே  காரணம் எனத் தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்நிலையில், மரணித்தவர் மாரடைப்பு காரணமாக மரணித்ததாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வாக்குமூலம் பெறுவதற்காக இருவரை அழைத்திருந்தனர்.

அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பொலிசார் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்களை கைது செய்து வவுனியா நீதிமன்றில் முற்படுத்தினர்.

அவர்கள் இருவரையும் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் சில நபர்களை கைதுசெய்யுமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (15) விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களுள் ஒருவர் தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.