அன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய யேர்மனிய மற்றும் உலகவாழ் ஈழத்தமிழ்ச் சொந்தங்களே! வணக்கம்.
தமிழீழத் தேசியத்தலைவரது என்றும் நிலைத்து வாழும் மகுட வாக்கியங்களிலிருந்தே எழுதவும் பேசவும் முற்பட்டால் ‘விழிப்புத்தான் விடுதலைக்கான முதற்படி’ என்பதையே அகமும் புறமும் உச்சரித்துக் கொள்கின்றது.வாழும் சித்தாந்தமாக ஒட்டுமொத்தத் தமிழினத்தின் இயங்கு விசையினை உயிர்ப்போடு வைத்திருந்து, வடிவங்கள் வேறாகியும் அடைந்துகொள்ளும் ஒரே இலட்சிய இலக்கான, தமிழீழம் நோக்கிய தெளிந்த செல்நெறியிலே உறுதி தளராது பயணிக்கும் தமிழ்த்தேசிய இனத்திற்கான ஒரே திசைகாட்டியும், உந்தித்தள்ளும் சக்தியுமானவரே எமது தமிழீழத் தேசியத்தலைவர்.அவரது பேராளுமைகளையும், கோட்பாடுகளையும், குழிதோண்டிப் புதைத்து, அவற்றுக்கொரு முற்றுப்புள்ளியிட்டு, வரலாற்றின் நீட்சியிலே தொடரவிடாது இடைநிறுத்தி, எதிரியின் காலடியிலே சுருங்கிக் கிடந்து, அற்பங்களுக்கு அடிமையாகி, சுயதெளிவற்ற இனமாக ஆக்கிவிடுவதற்கு, காலத்திற்குக் காலம் எதிரியும் வல்லாதிக்க அரசுகளும் கைக்கொண்ட அனைத்து வகையான உக்திகளையும் தகர்த்தெறிந்து, உறுதியோடு வாழும் தமிழினத்தை மீண்டும் ஒருதடவை நிலைதடுமாறச் செய்யச் சமகாலத்தில் கையிலெடுக்கப்பட்டிருக்கும் கருவியே ‘விளக்கேற்றல்’ என்ற விசம் திட்டிய கூரிய முனைப்பாகும்.
தன்னார்வம் மிக்க இளையவராக சுய தெளிவோடு, மண்மீதும் மக்கள்மீதும் பேரன்பு கொண்டு நேசிக்கும் தீராத் தாகத்தோடும் நெஞ்சுரம் மிக்க ஓர்மத்தோடும் ‘பாதையைத் தேடாதே அதனை உருவாக்கு’ எனும் அறச்சீற்ற நாயகனாய்ப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்து, அதனை அடக்குமுறைகளால் அவமானங்களால் இழிநிலை பெற்றிருந்த தமிழ்த்தேசிய இனத்திற்கான பலம்மிக்க அச்சாணியாகத் திகழ்ந்து, சொல்லுக்கு முன்னே செயல்களால் மக்கள் மனங்களிலே செல்வாக்குப் பெற்று, தன்னை மாத்திரமல்ல ஒட்டுமொத்தத் தமிழினத்தையே தலைநிமிரச் செய்து, பூமிப்பந்திலே தமிழீழம் என்ற நிலைபெறு அடையாளத்திற்கு ஆன்ம விழிப்புக்கொடுத்து, முப்படைகளையும் கட்டிவளர்த்து மதிநுட்ப வழிகாட்டியாக இன்றும் திகழும் பொற்காலப் பிதாமகனைத் தமிழ்த்தேசிய ஆன்மாவிலிருந்தும் எமது மக்களின் இதயத்துடிப்பிலிருந்து ஓரமாக்கிவிட எதிரி காணும் கனவுகள் ஒருபோதும் பலிக்காது. கூலிக்காய் ஏவலானவர்களைத் தமிழினம் என்றும் மதிக்காது, மன்னிக்காது தமிழீழம் என்ற உச்சத்திலே ஒளிரும் ஒளிக்கீற்றை யாரும் மூடிவிட முடியாது.
தமிழீழ விடுதலைப் போராட்டமானது,கெரில்லா முறைமையிலே ஆரம்பிக்கப்பட்டு, படிமுறை வளர்ச்சிகளால் பலம்பெற்று, மாற்றலாகி, மரபுவழி இராணுவமாகக் கட்டிவளர்க்கப்பட்டு, தமிழீழ நிழலரசின் தோற்றுவாயிலே இராணுவ, அரசியல், இராசதந்திர சமநிலை பேணப்பட்டு, அத்தனை வெற்றிகளின் நாயகனாகத் திகழ்பவரே எமது தேசியத்தலைவர். தமிழ்த்தேசிய இனத்திலே பிறந்த ஒவ்வொருவருக்கும் சம உரிமைகொண்ட எக்காலத்திற்குமுரிய தேசியத்தலைவரை, நாமே போராடிய சமூகம், எமக்கே தேசியத்தலைவர் உருத்துடையவரென ஒரு குழுமத்தினரும் நாங்களே அவரது நெருங்கிய உறவினர்கள், எமக்கே அவர் சொந்தமானவரென இன்னொரு சாராரும், நாமே தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மாபெரும் வரலாற்று இயக்கத்தின் அதிமுக்கிய துறைகளில் வாழ்ந்தோம் ஆதலால் எமக்கே முதற் தகமையுண்டு என மற்றுமொரு சாராருமாக, முண்டியடித்துக்கொண்டு, மாபெரும் வரலாற்றின் இமாலய சக்தியை ஒற்றைச் சிறிய புள்ளியோடு அடைத்து, பல தடவைகளாக விளக்கேற்ற முற்பட்டுத் தோற்றுவிட்ட பிறகும் அவ்வாறு முற்பட்டவர்கள் யாருமே சமூகப்பரப்பிலே முகம் காட்ட முடியாதவர்களாக, வெட்கித் தலைகுனிய மக்கள் கொட்டித் தீர்க்கும் கோப வார்த்தைகள் செவிப்பறைகளைக் கிழிக்க, மேலும் மேலும் புதிய கற்பிதங்களைத் தேடிக் கண்டுபிடித்து, மக்களின் மனவெளி நோக்கி வலிந்து திணிக்க முற்படுபவர்களே சமகாலப் பொய்க்கால்க் குதிரைகள்.இது தொடர்பில்,தெளிந்த நோக்கும் வற்றாத ஓர்மமும் கொண்டுள்ள எமது மக்களால் இவர்களும் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.
இப்படியான தரப்புக்களைப் போலவே இன்னுமோர் தரப்பினர், தேசியத்தலைவர் அவர்களும் அவரது மகளும், அத்தோடு புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரும் இதோ வருகிறார்கள், பொருளாதார உதவிகளைக் கோருகின்றார்களென மிக அற்பத்தனமான போலிப்பரப்புரைகளை விதைத்தபடி, நிதிமூலங்கள் நோக்கிய ஏமாற்று வித்தைகளை அரங்கேற்றி வருகின்றார்கள். விளக்கேற்றவென ஒரு குழுவும், இருப்போர்க்கு நிதிசேர்க்க இன்னோர் குழுவுமாக ஆகமொத்தத்திலே, தேசியத்தலைவரின் மகிமையையும் மாண்பையும் பங்குபோட்டு அழிப்பதனைக் கையிலெடுத்திருக்கும் இவர்களது போக்கினைத் தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்த தேசங்களிலே வாழும் தமிழ்மக்கள் நன்கு அறிந்து தெளிந்தே உள்ளார்கள். இந்நாசகாரக் குழுக்கள்,நெஞ்சிலே குத்துவதும் முதுகிலே குத்துவதும் தமிழீழத் தேசியத்தலைவரை அழித்தேவிட வேண்டுமெனும் உண்மையான மனநிலையை புலப்படுத்துகிறது.
வினாடிப் பொழுதுகளையே நனகு திட்டமிட்டு, நுண்ணிய இலக்குகளை வென்று கரைசேரக் காத்திருந்து, உலகே வியந்து நோக்கிய இமாலய சாதனைகளை ஈட்டிய வரலாற்று இயக்கத்தின் வழிவந்த இனமான நாம், மே 17,18,19 ஆகிய நாட்களிலே எது சரியானது என்பதைக் கண்டறியக் கடந்த பதினாறு வருடங்களாகத் திண்டாடுவதைக் காண்கின்றோம். உரத்துக் குரலெடுத்து ஒலமிட்டு அழுதால், சுற்றாடல் முழுவதுமாகக் கேட்கும் குறுகிய நிலப்பரப்பான முள்ளிவாய்க்கால்ப் போர்க்களத்திலே இறுதி நாளென்பது எதுவெனவும், என்னதான் நிகழ்ந்ததெனத் துல்லியம் தெரியாத கற்பனைக் கதை வளர்ப்போரையே திரும்பத் திரும்ப ஊடகங்களிலும் உரையாடல்களிலும் தற்புகழ்ச்சியில் மிதக்கக் காண்கின்றோம். இங்கும் மேதகு சித்தாந்தமே நீட்சி பெறுகின்றது. யாரும் முற்றுப்புள்ளியிட முடியாத சூரியப் புதல்வனை நோக்கி, ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய இனமும் நிதானம் கொள்ளும்வரை சில்லறைத்தனமானவர்கள் தோற்றுக்கொண்டே இருப்பார்கள், நுனிப்புல் மேய்ந்தோரால் ஊடகங்கள் நிரம்பி வருமானப் பெருக்கம் நிகழலாம். இருப்பினும், எதிரி காணும் கனவுகள் யாவும் அறச்சீற்றப் பாதங்களால் மிதிபட்டே போகும்.
போரும் போர்சூழ்ந்த வாழ்வுமாக தம்மையே அர்ப்பணித்து, அவயங்கள் அறுபட்டு இருள்சூழ்ந்து கிடக்கும் தாயக உறவுகளின் மீள் வாழ்விற்கோ, அரசியலின் பெருத்த வெளியிலே குந்தியிருக்கும் தமிழினத்தின் நியாயாதிக்கத் திசைக்கு ஒரு துரும்பையேனும் கடந்த பதினாறு வருடங்களாக எடுத்துப் போடாது, சுகபோகங்களுக்குள்ளே கட்டுண்டு கிடந்தபடி, பொருளாதார இலக்குகளிலே மட்டும் கடைக்கண் செலுத்தி, புலம்பெயர்ந்த தேசங்களிலே எஞ்சியுள்ள கட்டமைப்புகளைச் சிறுமைப்படுத்திக் குழுநிலைகளை உருவகித்துக் கிடந்தவர்கள், திடீரென விழிப்படைந்தவர்களாக இயங்கும் சமகாலத் தேவை எதனாலெனும் சந்தேகம் மேலோங்குவதைத் தவிர்க்கமுடியாது.நான்கு சுவர்களுக்குள்ளே ஒளிந்திருந்து, நவீன இலத்திரனியல் உருவகங்களால் எதிரியின் சிந்தனைக்கு முதன்மையளித்து, விளக்கேற்றிவிட விரும்பியதைப் பேசுவோர் ஒன்றை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டப்படுகின்றீர்கள்.நீங்கள் ஏற்றத்துடிக்கும் தம் விளக்கிலேயிருந்துதான் தலைவரது மாண்பு பலபடி உயரப்போவதுமில்லை. நீங்கள் ஏற்றாது இரண்டறக் கலந்து இன்றும் வாழும் சித்தாந்தமே மேதகுதான். எங்கு சுமக்க வேண்டுமெனவும், எப்படிச் சுமக்க வேண்டுமெனவும் தெளிவோடுள்ளவர்கள் மக்கள். தேசியத்தலைவர் காட்டும் இலட்சியத் திசை நோக்கித் தமிழினம் வெற்றிநடை போட்டு இலக்கினை எட்டும்வரையும் எட்டிய பின்னரும் அவரேதான் தமிழினத்தின் வழிகாட்டி.
மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்களுடைய கூற்றிலிருந்து: ‘பிரபாகரன் என்பது ஒரு தனிமனிதரது பெயரல்ல. அது ஒரு கொள்கையாக மலர்ந்து நிற்கின்றது. தமிழ் மக்களின் விடுதலை, தமிழ் மக்களின் வாழ்வு, தமிழ் மக்களின் போராட்டம், தமிழ் மக்களின் இலட்சியம் இத்தனையும் அந்தப் பிரபாகரன் என்ற பெயருக்குள் அடக்கம்’ இந்த அடையாள அடைவுகளை யாரும் தான்தோன்றித்தனமாக முற்றுப்புள்ளியிட்டுக் கடந்து செல்ல முடியாது.
அன்பான எமது மக்களே!
சிங்களப் பேரினவாத அரசும், தம்நலன்பேண் வல்லரசுகளும் நினைப்பதுபோல், தமிழீழத் தேசியத்தலைவரது வாழ்வியலுக்கு முற்றுப்புள்ளியை இட்டுவிட்டால், தாம் விரும்பும் தமக்குச் சாதகமான ஒருவரைத் தமிழினத்தின் தலைமைத்துவம் நோக்கி நகர்த்தலாம். நகர்த்தப்படும் யாரோ அந்த வெற்று மனிதரைக் கேடயமாக வைத்து, தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதியாக உலகிற்கு ஒப்புதலளித்து, தாம் நினைப்பதை எழிதில் அடைந்துவிடலாமெனக் கனவு காண்கின்றது. அந்த அடைவின் மூலமாகத் தமிழ்த்தேசிய இனத்திற்கான ஒரு பிரச்சினையே இல்லை என்பதனையும் இலங்கைத்தீவிலே மூவின மக்களும் கூட்டிணைந்த சமத்துவம் கட்டி வளர்க்கப்படுவதான ஒரு போக்கினை நிலைநிறுத்தத் துடிக்கின்றார்கள். ஆயிரமாயிரம் தியாகத் திரட்சிகளை நீர்த்துப்போகச் செய்யும் நயவஞ்சக எண்ணங்களுக்குத் துணைபோகும் வீணர்களைத் துரத்தியடிப்போம்.
மே 19 அன்றுதான் தேசியத்தலைவர் வீரச்சாவடைந்தார் என்பதை மறைமுகமாக உட்பதிவாகவும், மே 18 அன்றுதான் வீரச்சாவடைந்தாரென வெளிப்பதிவாகவும் பதிவேற்றம் செய்துள்ள குழுக்கள், மே 18 தமிழின அழிப்பு நினைவு நாளாகப் பிரகடனப்படுத்தி, நினைவேந்தி நீதிகோரும் நாளை நீர்த்துப்போகச்செய்து, எதிரியின் எண்ணமான மே 18 ல் நிகழ்ந்தது தமிழின அழிப்பல்ல அது புலிப் பயங்கரவாதிகளை அழித்து வென்ற நானென்பதை எம்மையே சாட்சியாக வைத்து நிறுவுதலின் மூலமாகத் தமிழ்த்தேசிய இனம் உலக நீதியின் முன்னே தொடுத்திருக்கும் நீதி கோரலைத் தடுத்துவிடலாமெனப் பகற்கனவு காண்கின்றது. அறமும் சத்தியமும் எமது பக்கம் நிலைத்திருக்கும்வரை தமிழினத்தின் நீதிகோரல் இடைவிடாது தொடரும்.மாறாக வரலாற்றுத் தவறுகளை உருவாக்கி, அதனை அடைந்துவிடத் துடிக்கும் அற்பர்கள் மறைந்துபோவார்கள். தமிழீழ மண்ணிலே முளைவிடும் ஒரு சிறு புற்கூட இந்த அற்பர்களை மதிக்காது.
உயிரிலும் மேலான உறவுகளே விழிப்படைவோம்!
கடந்த பதினாறு ஆண்டுகளுக்கு மேலாகப் புலம்பெயர் தேசங்களிலே, தமிழீழத் தேசியத்தலைவரது எண்ணங்களால் நிமிர்ந்தெழுந்த கட்டமைப்புகளைச் சீர்குலைக்கவும், மரபு வழியாகக் கட்டிக் காக்கப்பட்ட மாவீரர் வணக்க நிகழ்வின் அடையாளங்களை மாற்றியமைத்தும், மக்களை ஓர் அணியத் திரட்சிக்குள் தரித்து நிற்கவிடாது. பல்வேறுபட்ட குழப்பங்களை உருவாக்குவதும் விடுதலைப்பணியாற்றும் செயற்பாட்டாளர்கள் மீது, அவதூறுகளை அள்ளிவீசுவதுமாக தம்மை ஈடுபடுத்தினார்கள்.உயிர்களைக் காவுகொள்ளும் தீய வழிமுறைகள்வரை நீண்டிருந்த எதிரியின் நிகழ்ச்சிநிரலை எமது உயிரிலும் மேலான உறவுகளின் விழிப்பே இன்றுவரை காக்கும் ஆயுதமாக இருந்து வருகின்றது. அதன் தொடர்ச்சியில் இப்போதும் சரியான முடிவுகளை எடுத்துக்கொள்வோம். துரோகங்களுக்கும் சவால்களுக்கும் எதிராக தெளிந்த உறுதியோடு விழிப்பால் காப்பரண் அமைத்துநிற்போம்.
தமிழீழத் தேசியத்தலைவர் காட்டும் வழிதன்னில் எமது சுதந்திர இலக்குநோக்கி இடைவிடாது பயணிப்போம், தமிழீழம் என்ற இலக்கினை வென்று அந்த வெற்றிக்களிப்பிலே அசைந்தாடும் தமிழீழத் தேசியக் கொடியின் ஒளிக்கீற்றில் துலங்கும் புதிய பரிணாமங்களிலிருந்து தேசியத்தலைவரின் சிந்தனை தொடர்ந்தும் சுதந்திர தேசவாழ் ஈழத்தமிழ் மக்களையும் வழிநடாத்தும். ஆகஸ்ட் 02 ஆம் திகதி சுவிற்சர்லாந்து நாட்டிலே நிகழவிருக்கும் விளக்கேற்றல் என்று நிகழ்ச்சியை உறுதியோடு புறக்கணிப்போம்.
நன்றி.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.