வலிகாமம் வடக்கில் அரசபடையினரால் சுமார் 35 வருடகாலமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது பூர்வீக நிலங்களை மீளக்கையளிக்குமாறுகோரி நேற்றைய தினம் கொழும்பில் விசேட கவனயீர்ப்புப்போராட்டமொன்றை முன்னெடுத்த அந்நிலங்களின் உரிமையாளர்கள், ஜனநாயகத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முன்னைய அரசாங்களின் கொள்கைகளையே தொடர்ந்து பின்பற்றுவாராயின், அது மக்கள் வழங்கிய ஆணைக்கு முற்றிலும் முரணானதாகும் எனச் சுட்டிக்காட்டினர்.
யாழ் வலிகாமம் வடக்கில் அரசபடையினரால் கையகப்படுத்தப்பட்ட தமது பாரம்பரிய நிலங்களை விடுவிக்குமாறுகோரி அந்நிலங்களின் உரிமையாளர்கள் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு அருகாமையில் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை 9.30 – 10.30 மணி வரை அமைதியான முறையில் கவனயீர்ப்புப்போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
‘எமது பூர்வீக நிலத்தை எம்மிடம் மீளக்கையளியுங்கள்’ எனும் கோஷத்துடன் மேற்கொள்ளப்பட்ட இக்கவனயீர்ப்புப்போராட்டத்தில் வலிகாமம் வடக்கில் அரசபடையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களின் உரிமையாளர்களுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்துகொண்டிருந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட நில உரிமையாளர்கள் ‘1999 இல் வழிபடச் சென்றபோது இருந்த பலாலி புனித செபஸ்தியார் ஆலயம் இப்போது எங்கே?’, ‘எமது நிலங்களே எமது வாழ்க்கை’, ‘ஒன்றாய் எழுவோம்’, ‘எமது பூர்விக நிலத்தை மீள எம்மிடம் ஒப்படையுங்கள்’, ‘எமது வாழ்வாதாரத்தை சூறையாடாதீர்கள்’, ‘ஜனாதிபதி அவர்களே! நீதிக்கான எம் கண்ணீரை நீங்கள் இன்னமும் பார்க்கவில்லையா?’ எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
அத்தோடு இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதப்பட்ட பகிரங்க கோரிக்கைக் கடிதம் இதன்போது வழங்கப்பட்டது. அக்கடிதத்தில் ‘தெல்லிப்பழை பிரதேச செயலகப்பிரிவின் வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் அனைவரும் போரின் விளைவாக 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தனர். 2009 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு, 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், எமது பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதுடன் நாம் மீண்டும் எமது நிலங்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதன்விளைவாக நாம் இடைத்தங்கல் முகாம்களிலும், எமது உறவினர்களின் வீடுகளிலுமே வசித்தோம். அதனைத்தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், காணி கையகப்படுத்தல் சட்டத்தின் 5(1) ஆம் பிரிவின்கீழ் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக எமக்குச் சொந்தமான பரந்துபட்டளவிலான காணிகளைக் கையகப்படுத்தியது. அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் எமது பூர்வீகக் காணிகள், வாழ்வாதார வளங்கள், விவசாயக் காணிகள், மீன்பிடி பகுதிகள், மத வணக்கஸ்த்தலங்கள் என்பன உள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் ஜனநாயகத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய உங்களது அரசாங்கம், காணி உள்ளிட்ட விடயங்களில் முன்னைய அரசாங்கங்களின் கொள்கைகளையே பின்பற்றுவது மக்கள் வழங்கிய ஆணையைப் புறக்கணிக்கும் செயலாகும். எனவே இதுகுறித்து உடனடியாக அவதானம் செலுத்தி, எமது பாரம்பரிய நிலங்களை விடுவிப்பதற்கு நடவடி;ககை எடுங்கள்’ எனக் கோரப்பட்டுள்ளது.

அதேவேளை போராட்டத்தில் கலந்துகொண்ட வலிகாமம் வடக்கு நில உரிமையாளர் ஒருவர், காணி விடுவிப்பை வலியுறுத்தி தாம் மயிலிட்டியில் போராட்டமொன்றை மேற்கொண்டதாகவும், இருப்பினும் அங்கு எந்தவொரு அரச அதிகாரியும் வருகைதராததன் காரணமாகவே தற்போது கொழும்பில் இக்கவனயீர்ப்புப்போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.





