முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனுக்கு எதிராக கண்டி மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வலுவற்றதாக்கும் கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி சட்டமா அதிபர் தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு நேற்றுமுன்தினம் (14) உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி சில்வா, மகிந்த சமயவர்தன மற்றும் சோபித ராஜகருணா ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் அமர்வில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் மாரப்பன தனது சேவை பெறுநர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நடப்பதற்கு கூட சிரமப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
எனினும் இந்த மனு தொடர்பிலான விடயங்களை உறுதிப்படுத்த வேறு திகதி ஒன்றை பெற்றுத்தருமாறு சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மன்றில் கோரிக்கை விடுத்தார்.
இதற்கமைய இந்த மனுவை எதிர்வரும் செப்டம்பர் 3 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவு பிறப்பித்தது.
1999 ஆம் ஆண்டு மாத்தளை தம்புல்கமுவவில் 18 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கொலை செய்தமை மற்றும் கொலைக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக கண்டி மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட விதம் சட்டத்துக்கு முரணானது எனத்தெரிவித்து முன்னாள் அமைச்சரால் மேன்முறையீட்டு நீதிமன்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னாள் அமைச்சருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளித்து 2020 ஆம் ஆண்டு அதை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது எனவும் குறித்த உத்தரவை வலுவற்றதாக்கும் கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு வலியுறுத்தியும் சட்டமா அதிபரால் இந்த விசேட மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

