சங்க கட்டிடத்தை நிர்வகிப்பது யார் என்பதில் தகராறு: விருதுநகரில் அரசு ஊழியர் சங்கத்தினரிடையே மோதல்

46 0

விருதுநகரில் சங்​கக் கட்​டிடத்தை நிர்​வகிப்​பது யார் என்​பது தொடர்​பாக அரசு ஊழியர் சங்​கத்​தினரிடையே நேற்று மோதல் ஏற்​பட்​டது. இது தொடர்​பாக 44 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். விருதுநகர் முத்​து​ராமலிங்​கம் தெரு​வில் 3,700 சதுர அடியில் கட்​டிய அரசு ஊழியர் சங்​கக் கட்​டிடம் உள்​ளது. கடந்த 2019-ல் தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கத்​தின் மாநிலப் பொதுச் செய​லா​ளர் அன்​பரசனுக்​கும், விருதுநகர் மாவட்ட நிர்​வாகி​களுக்​கும் இடையே கருத்து வேறு​பாடு ஏற்​பட்​ட​தால், மாவட்​டக் குழுவை மாநில குழு கலைத்​தது.

இதை எதிர்த்து விருதுநகர் மாவட்ட சங்​கம் தொடர்ந்த வழக்​கில், மாவட்ட குழு கலைக்​கப்​பட்​டது செல்​லாது என்று நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது. 2019 முதல் விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்​கக் கட்​டிடத்தை மாவட்ட நிர்​வாகி​களே பராமரித்து வந்​தனர். 2023ல் விருதுநகரில் தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கத்​துக்கு மாற்​றாக, ‘தமிழ்​நாடு அரசு ஊழியர்​கள் சங்​கம்’ என்ற புதிய சங்கத்தைமாவட்​டக் குழு நிர்​வாகி​கள் தொடங்​கினர்.அதே​நேரம், சங்​கத்​தின் மாநில துணைச் செய​லா​ளர் கண்​ணன் தலை​மை​யில் அரசு ஊழியர் சங்​கக் கட்​டிடம் தொடர்ந்து நிர்வகிக்​கப்​பட்டு வந்​தது. இந்​நிலை​யில், தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கத்​துக்கு மாவட்​டச் செய​லா​ள​ராக கருப்​பையா உள்​ளிட்ட நிர்​வாகி​கள் தேர்வு செய்​யப்​பட்​டனர். இதையடுத்​து, தமிழ்​நாடு அரசு ஊழியர்​கள் சங்​கத்​தின் கட்​டுப்​பாட்​டில் இருந்த கட்​டிடத்​தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கத்​தினர், நேற்று முன்​தினம் எழுச்சி நாள் கருத்​தரங்​கம் நடத்தினர்.

இதற்கு எதிர்ப்​புத் தெரி​வித்து அரசு ஊழியர்​கள் சங்​கத்​தினர் போலீ​ஸாரிடம் புகார் தெரி​வித்​தனர்.நேற்று 2-வது நாளாக அக்கட்டிடத்​தில் அரசு ஊழியர் சங்க நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் நடத்​தினர். அப்​போது, கட்​டிடத்தை ஏற்​கெனவே நிர்​வகித்து வந்த அரசு ஊழியர்​கள் சங்​கத்​தினர் திரண்டு வந்து கட்​டிடத்​தைக் கைப்​பற்ற முயன்​றனர். அப்போது இரு தரப்​பினரும் ஒரு​வரையொரு​வர் கடுமை​யாக தாக்​கிய​தில் ஊழியர்​கள் பலர் காயமடைந்​தனர்.

தொடர்ந்​து, போலீ​ஸார் இரு தரப்​பினரை​யும் கட்​டிடத்​திலிருந்து வெளி​யேற்​றினர். அப்​போது, தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், சங்​கக் கட்​டிடத்​தின் முன் அமர்ந்து தர்​ணா​வில் ஈடு​பட்​டனர். பின்னர் அரசு ஊழியர் சங்​கத்​தினர் 34 பேரை போலீஸார் கைது செய்​தனர். அதே​போல, மற்​றொரு சங்​க​மான தமிழ்​நாடு அரசு ஊழியர்​கள் சங்க நிர்​வாகி​கள் 10 பேரை விருதுநகர் மேற்கு போலீ​ஸார் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக கைது செய்​தனர்.

கட்டிடத்துக்கு `சீல்’ வைப்பு: இந்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடந்தது. வட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து பிரச்சினைக்குரிய கட்டிடத்தை வருவாய்த் துறையினர் பூட்டி `சீல்’ வைத்தனர்.