இலங்கை மீதான பிரித்தானியாவின் கரிசணைக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் – சஜித்

56 0

உலகளாவிய வர்த்தகம் கடினமாக இருக்கும் நேரத்தில் பிரித்தானியா அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை ஆதரித்து வருகிறது. பிரித்தானியாவின் இந்த கரிசணைக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சகல பொருட்களுக்கும் 30 வீத பரஸ்பர தீர்வை வரியை விதித்துள்ளார்.

ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து இந்த வரி நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களிலிருந்து விடுபடச் செய்யும் நோக்கில் ஆடை உட்பட ஏனைய பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் இந்த தீர்மானம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உலகளாவிய வர்த்தகம் கடினமாக இருக்கும் நேரத்தில் பிரித்தானியா அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை ஆதரித்து வருகிறது. பிரித்தானியாவின் இந்த கரிசணைக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தின் கீழ் பிரித்தானியா அதன் மூல விதிகளை தளர்த்தியுள்ளது.

இதன் பொருள் பல்வேறு துறைகள் ஏற்றுமதி செய்வதற்கும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், அந்நிய செலாவணி வரவை அதிகரிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதாகும்.

நாம் இதைப் பயன்படுத்திக் கொண்டு மிகவும் தேவையான வர்த்தக வெற்றியைக் பெற்றுக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.

இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலிருந்து இறக்குமதிகளை எளிதாக்குவதற்கு திருத்தப்பட்ட வரி திட்டத்தை பிரித்தானியா வெளியிட்டுள்ளது.

இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஆடை போன்றவற்றை வரியின்றி இறக்குமதி செய்ய பிரித்தானியா தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.