அமெரிக்காவின் 30 சதவீத தீர்வை வரி இலங்கையின் போட்டித்திறனை கடுமையாக பாதிக்கக்கூடும்

51 0

அமெரிக்காவின் 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி அறிவிப்பானது இலங்கையின் ஆடைத் தொழில்துறையில் கணிசமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரி உயர்வு பிராந்திய போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இலங்கையின் போட்டித்திறனை கடுமையாக பாதிக்கக்கூடும் என ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

ஆகஸ்ட் முதல் அமலுக்கு வரவுள்ள அமெரிக்காவின் 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி அறிவிப்பானது இலங்கையின் ஆடைத் தொழில்துறையில் கணிசமான கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாய் ஈட்டுபவர்களில் ஒன்றான இத்துறை அமெரிக்க சந்தையை பெரிதும் நம்பியுள்ளது. மேலும், இந்த வரி உயர்வு பிராந்திய போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இலங்கையின் போட்டித்திறனை கடுமையாக பாதிக்கக்கூடும்.

வியட்நாம் ஏற்கனவே ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து தற்போது 20 சதவீத தீர்வை வரிக்கு உட்பட்டுள்ளது. பங்காளதேஷ் 35 சதவீத வரி விதிப்பை எதிர்கொண்டாலும், அமெரிக்காவுடன் வரிக்குறைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டது.

இந்தியா இன்னும் பேச்சுவர்ர்த்தைகளை நடத்தி வருகிறது. எனினும் ஆரம்பகட்ட தகவல்கள் இலங்கையை விட சாதகமான வரி விகிதம் கிடைக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. இலங்கையை விட சற்று அதிகமான வரி விகிதம் கொண்ட கம்போடியாவும் வரிக்குறைப்புக்கான பேச்சுவார்த்தைகளை நடத்த வாய்ப்புள்ளது.

30 சதவீத வரி தொடர்ந்தால், அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த வரிவிகிதம் கொண்ட நாடுகளை நாட ஆரம்பித்து விடுவர். எனவே, இலங்கைக்கு சாதகமான ஒப்பந்தம் கிடைப்பதை உறுதி செய்ய, அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

44 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக வரி வீதம் குறைக்கப்பட்டிருப்பது, இலங்கை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி இடையேயான கலந்துரையாடல்கள் நேர்மையான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதை அங்கீகரிக்கும் ஒரு அறிகுறியாகும்.

2025 ஆகஸ்ட் முதலாம் திகதி காலக்கெடுவுக்கு முன் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் கோரிக்கை உடன் பேச்சுவார்த்தைகள் மிக விரைவில் தொடரும் என அரசாங்கம் தெரிவித்ததில் மகிழ்ச்சியடைகின்றோம். வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும், சந்தைப் பங்கை நிலைநிறுத்தவும், உலக ஆடை விநியோக சங்கிலிகளில் இலங்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் இராஜதந்திர தீர்வு அத்தியாவசியமானது.