இந்திய ஒப்பந்தம்: பொதுச் சுகாதாரத்தை பாதிக்கும் அரசின் மருந்து கொள்வனவு

73 0

அரசாங்கம்  அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் செயல்முறையை நிராகரித்து,  இந்தியாவுடன்  செய்துகாண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் மருந்துபொருட்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இது இந்தியாவின் வியாபார நோக்கத்துக்காக எமது பொது சுகாதாரத்தை பழி கொடுக்கும் நடவடிக்கையாகும் என முன்னிலை  சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபது ஜயகொட தெரிவித்தார்.

முன்னிலை சோசலிச கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாக மாறுவருகிறது. அதற்கு  சிறந்த உதாரணத்தை மருந்து துறையில் கண்டுகொள்ள முடியும். நாட்டில் தற்போது நிலவும் 113 வகையான மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளது. ஆனால் இந்த மருந்து கொள்வனவு அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் செயல்முறையை நிராகரித்து, அரசாங்கம் தலையிட்டு, நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் மூலம் மருந்துபொருட்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால் மருந்து பொருட்களின் தரம் தொடர்பில் பாரிய பிரச்சினை இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்துனேசியா,தாய்லாந்து மற்றும் துர்க்கி போன்ற  நாடுகளின் கொள்முதல் செயல்முறை இல்லாமல் மருந்துகளை கொள்வனவு செய்ய முயற்சித்தார்கள். என்றாலும் இந்தியாவுக்கு  மருந்து கட்டளை கொள்வனவை வழங்குவதற்கான  நடவடிக்கையாக ஏனைய நாடுகளின் பெயர்களை பயன்படுத்துகிறார்கள். என்றாலும் இறுதியில் இந்தியாவுக்கே இதனை வழங்குகிறார்கள்.

கொழும்பு டொக்யாட் நிறுவனத்தின் 51வீத  பங்குகளை இந்திய பாதுகாப்பு  அமைச்சுக்கு கீழ் செயற்படும் மெசகன் டொக்ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யும்போதும் இவ்வாறே செயற்பட்டார்கள். தற்போது இந்தியா தனது இராணுவ தேவைக்காக இலங்கையின் தேசிய பாதுகாப்பை பழி எடுக்கிறது. மருந்து கொள்வனவிலும்  அவ்வாறே இடம்பெறுகிறது. இந்தியாவின் வியாபார நோக்கத்துக்காக எமது பொது சுகாதாரத்தை பழி கொடுக்கிறது.

நாடுகளின் அரசாங்கங்கள் ஊடாக  கொள்முதல் செயல்முறை இல்லாமல் கொண்டுவரப்படும் மருந்து, உரிய தரத்தில் இருப்பது என்பது இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என கேட்டபோது,  அவை இலங்கையில் பதிவு செய்யப்பட தேவையில்லை. அந்தந்த நாடுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தால் போதுமானது என கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பின்போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். இது இந்திய ஒப்பந்தத்தில் இருந்த ஒரு விடயமாகும்.

இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்து, இவ்வாறு நோயாளர்களுக்கு வழங்குவதும், பதிவை கைவிட்டு டபிள்யூ. ஓ. ஆர் கடிதம் ஊடாக முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கொண்ட தரம் குறைந்த  மருந்து வியாபாரத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?. இந்தியாவின் அழுத்தங்களுக்கு கீழ் படிந்து இலங்கையின் சட்டத்துக்கு  கீழ் தரம் குறைந்த மருந்துகளை கொண்டுவரவே முயற்சித்தார்கள்.

இதுதொடர்பில் எதிர்ப்புகள் வந்தபோது, இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்துப் பொருட்கள் காெண்டுவருவதில்லை. பதிவு செய்துவிட்டே கொண்டுவரப்படும் என கடந்த  8ஆம் திகதி இடம்பெற்ற  அமைச்சரவை ஊடக சந்திப்பின்போது  சுகாதார அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஆனால் அரசாங்கம் தெரிவிக்கும் 113 மருந்து  பொருட்களில் 43 வகைகள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதாக தேர்தலில் வாக்குறுதி அளித்த தேசிய மக்கள் சக்தி, அரசாங்கத்தை பெற்றுக்கொண்டு தற்போது என்ன செய்கிறது என்பது தற்போது மக்களுக்கு நன்கு புரிகிறது என்றார்.