இந்திய தாதி பிரியாவிற்கு 16ம் திகதி மரணதண்டனையை நிறைவேற்ற தயாராகின்றது யேமன்

75 0

யேமன் நிமிஷா பிரியா என்ற இந்திய தாதிக்கு எதிர்வரும் 16 ம் திகதி மரண தண்டனையை நிறைவேற்ற தயாராகிவருகின்ற அதேவேளை இதனை தடுத்து நிறுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளனர்.

யேமன் வர்த்தகர் ஒருவரை கொலை செய்தமைக்காக அந்த நாட்டு அதிகாரிகள் பிரியாவிற்கு 2017 இல் மரணதண்டனை விதித்தனர்.

அந்த வர்த்தகரின் துண்டுதுண்டாக்கப்பட்ட உடல் நீர்தாங்கியொன்றில் மீட்கப்பட்டது.

இந்த நிலையில் கொல்லப்பட்ட வர்த்தகரின் குடும்பத்தவர்கள் மன்னித்தால் மாத்திரமே பிரியாவை காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பிரியாவின் உறவினர்கள் வர்த்தகரின் குடும்பத்தினருக்கு வழங்குவதற்காக பெருமளவு பணத்தை திரட்டியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.

நாங்கள் அவர்களின் பொதுமன்னிப்பு மற்றும் நிபந்தனைகளிற்காக காத்திருக்கின்றோம் என சேவ் நிமிஷா பிரியா பேரவையின் உறுப்பினர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

நீதித்துறை அதிகாரி மரணதண்டனை நிறைவேற்றப்படும் திகதி குறித்து சிறைச்சாலை அதிகாரிகளிற்கு அறிவித்துள்ளார்,நாங்கள் அவரை காப்பாற்ற முயல்கின்றோம்,எனினும் இறுதியில் கொல்லப்பட்ட வர்த்தகரின் குடும்பத்தினரே இணங்கவேண்டும் என பாபு ஜோன் என்ற சமூக சேவையாளர் தெரிவித்துள்ளார்.

நிமிஷா பிரியா 2008 இல் கேரளாவிலிருந்து யேமனிற்கு தாதியாக பணியாற்றுவதற்காக சென்றார்.

2017இல் வர்த்தகரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டார்.தற்போது அவர் யேமன் தலைநகர் சனாவில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதிகளவு மயக்கமருந்தை கொடுத்த பின்னர் வர்த்தகரை பிரியா கொலை செய்தார் உடலை துண்டுதுண்டாக வெட்டினார் என அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.