உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை வெளிப்படுத்துவோம் ; மஹிந்த ஜயசிங்க

78 0

பிள்ளையானுடன் அரசாங்கத்திற்கு எந்த டீலும் கிடையாது. அவ்வாறு டீல் இருந்திருந்தால் இனிய பாரதி கைதாகியிருப்பரா? மக்களுடன் எமக்கு டீல் உள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் உண்மையை வெளிப்படுத்துவோம் என்று  தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (09) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் உண்மையை வெளிப்படுத்துவோம், சூத்திரதாரிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவோம் என்று ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் போது மக்களுக்கு வாக்குறுதியளித்தோம்.

மக்களுக்கு வழங்கிய  வாக்குறுதியில் இருந்து ஒரு துளியளவேனும் விலக மாட்டோம். விசாரணைகளை துரிதமாக முடித்து சகல இலங்கையர்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவே முயற்சிக்கின்றோம்.

ஆனால் பல்வேறு காரணங்களால் இதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.  எவ்வாறாயினும் நாங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வோம் என்பதனை உறுதியாக கூறிக்கொள்கின்றோம்.

இதேவேளை இந்த விடயத்தில் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம். இது மக்களின் அரசாங்கமே. பயங்கரவாத தடைச்சட்டத்தில் சிறையில் உள்ள  பிள்ளையானுடன் அரசாங்கம் டீல் வைத்திருப்பதாக குறிப்பிடுவதை முற்றாக நிராகரிக்கிறோம். பல குற்றங்களில் சந்தேக நபராக கருதப்படும் பிள்ளையானுடன் டீல் வைக்க எமக்கு எவ்வித அவசியமும் கிடையாது.

இவர்கள் குறிப்பிடுவதை போன்று பிள்ளையானுடன் நாங்கள்  டீல் இருந்தால் அவருடன் இருந்த இனிய பாரதி கைது செய்யப்பட்டிருப்பாரா, அவ்வாறு எவருடனும் டீல் கிடையாது. மக்களுடனேயே டீல் உள்ளது. அந்த டீலை முறையாக செயற்படுத்துவோம் என்றார்.