எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள்

79 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர், 2021, 2023, மற்றும் 2024 ஆம் ஆண்டு விவாதங்களில் இவ்விவகாரம் குறித்து பல கேள்விகளை எழுப்பியதாகவும், உண்மையைக் கண்டறிய தெளிவான வேலைத்திட்டம் தேவை என்றும் கூறினார்.

2024 ஏப்ரலில் கார்டினல் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சட்ட நிபுணர்களுடன் கலந்துரையாடி, 6 அம்ச முன்மொழிவுகளை முன்வைத்ததாகவும், இந்த 6 அம்சங்கள் குறித்து பாராளுமன்றத்திலும் கருத்து வெளியிட்டுள்ளேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

*தேசிய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசேட விசாரணை ஆணைக்குழு அமைத்தல். 

*நிரந்தர விசாரணை அலுவலகம் தாபித்தல். 

*விசாரணைக்கான வேலைத்திட்டம் உருவாக்குதல். 

*சட்டமா அதிபரால் குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்தல். 

*விசேட நீதிமன்றம் தாபித்தல். 

*அரச வழக்கறிஞர் அலுவலகம் அமைத்தல். 

இவை அரசியல்மயமாக்கப்படுவதாகவும், கடந்த காலங்களில் அதிகாரிகள் மீது அழுத்தங்கள், பழிவாங்கல்கள் மூலம் விசாரணைகள் தடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்கொட்லாந்து யார்ட், எப்.பி.ஐ ஆகியவற்றின் ஆதரவுடன் நேர்மையான விசாரணை மூலம் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும், கத்தோலிக்க சமூகத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

முறையான மாற்றம் இல்லையெனில், கார்டினல் மற்றும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கலாம் எனவும், உண்மைக்காக ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் முன்நிற்கும் எனவும் தெரிவித்தார்.