சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சின் அனுசரணையில், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக சீன மக்கள் குடியரசின் வணிக அமைச்சின் அனுசரணையுடன் சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கான சர்வதேச ஒத்துழைப்பு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு ஜூன் 20 முதல் ஜூலை 6 வரை வெற்றிகரமாக நடைபெற்றது.
இச்செயலமர்வில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையிலான இலங்கை பாராளுமன்ற தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான ஆளும் கட்சி எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு அமைந்திருந்தது. இதில் ஆளும் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சமன்மலி குணசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, (லெப்டினன்ட் கமாண்டர்) (ஓய்வு) பிரகீத் மதுரங்க, அஜித் கிஹான், கிருஷ்ணன் கலைச்செல்வி, தினுந்து சமன் ஹென்னாயக்க, (சட்டத்தரணி) பாக்ய சிறி ஹேரத், அபூபக்கர் ஆதம்பாவா, அசோக குணசேன, தனுர திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், எதிர்க்கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான கின்ஸ் நெல்சன், பி.ஆரியவன்ச மற்றும் அநுராத ஜயரத்ன ஆகியோர் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.

பதவியணித் தலைமையதிகாரியும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, பாராளுமன்ற செயலகத்தின் சிஷே்ட பாராளுமன்ற ஒழுங்குமரபு உத்தியோகத்தர் ரணில் நாணயக்கார, பாராளுமன்ற சபை முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த முகாமைத்துவ சேவை அதிகாரி திலினி துஷாரிகா கமகே ஆகிய அதிகாரிகளும் இந்தத் தூதுக்குழுவில் கலந்துகொண்டனர்.
இந்த விஜயத்தின்போது தூதுக்குழுவினர், லியோனிங் பிராந்தியத்தின் தலைநகரமான ஷென்யெங் நகருக்கு விஜயம் செய்ததுடன், அங்கு ஷென்யெங் உப நகராதிபதி லியூ கெபினை சந்தித்து வினைத்திறனான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த விஜயத்தில் கள விஜயம் மற்றும் கலாசார செயற்பாடுகள் சிலவும் அடங்கியிருந்தன. அதற்கமைய, இந்தத் தூதுக்குழுவினர் கிழக்கு சீனாவின் ஜியெங்சு பிராந்தியத்தின் தலைநகரமான நன்ஜியென் நகருக்கும் விஜயம் செய்தனர். இதன்போது ஜியெங்சு பிராந்தியத்தின் உப ஆளுநர் சென் ஷொங்வெய்யை சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும்.
கடந்த 5ஆம் திகதி பீஜிங்கில் நடைபெற்ற நிறைவு நிகழ்வுடன் செயலமர்வு முடிவுற்றதுடன், இந்த நிகழ்வில் சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் (NDRC) சர்வதேச ஒத்துழைப்பு மையத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் மஜிந்த ஜயசிங்கவும் கலந்துகொண்டார்.




