அரசாங்கத்தின் தாமதம் தொழிற்றுறையினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்

68 0

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட பரஸ்பர தீர்வை வரி பற்றி அமெரிக்காவுடன் பேசுகிறோம், பேசுகிறோம் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் இதுவரையில் சாதகமான பதில் கிடைக்கவில்லை. பிரச்சினை உள்ளதை நாங்களும் அறிவோம், தீர்வையே கேட்கிறோம். அரசாங்கத்தின் தாமதம் தொழிற்றுறையினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது

இலத்திரனியல் வணிக கட்டமைப்பில் தோற்றம் பெற்ற சிக்கல்களுக்கு தீர்வு கண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகிறார். அந்த தீர்வுகள் என்னவென்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமற்ற  வகையில்  கருத்துக்களை முன்வைப்பதை  அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வாகன இறக்குமதியின் போது  மூன்றாம் தரப்பு நாடுகளில் இருந்து கடன் பற்று பத்திரத்தை விநியோகித்து வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. 2013 ஆம் ஆண்டு முதல் இந்த முறைமை செயற்படுத்தப்பட்டது.தற்போது இந்த மூன்றாம் தரப்பு நாடுகள் முறைமை சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டுக் கொண்டு இறக்குமதி செய்த வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.இது நடைமுறையில் மாறுப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ஏற்றுமதி சேவைகளுக்கும், சர்வதேச நிறுவனங்களின் தேசிய சேவைகளுக்கும் புதிதாக வரி அறவிடப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. இதனால்  நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட பரஸ்பர தீர்வை வரி பற்றி அமெரிக்காவுடன் பேசுகிறோம், பேசுகிறோம் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இதுவரையில் சாதகமான பதில் கிடைக்கவில்லை. பிரச்சினை உள்ளதை நாங்களும் அறிவோம், தீர்வையே கேட்கிறோம். அரசாங்கத்தின் தாமதம் தொழிற்றுறையினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

டிஜிட்டல் பொருளாதாரம் பற்றி பேசப்படுகிறது. ஆனால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கும் வரி அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரி கொள்கையை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்பட்டால்  எவ்வாறு டிஜிட்டல் பொருளாதாரத்தை  முன்னேற்ற முடியும் என்றார்.