விடுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட கைவிலங்கு ; பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!

72 0

கண்டி – தலதா வீதியில் உள்ள விடுதி ஒன்றிலிருந்து ஒரு ஜோடி கைவிலங்கு கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது.

களனி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டி – தலதா வீதியில் உள்ள விடுதி ஒன்றில் கண்டி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது அறை ஒன்றிலிருந்து ஒரு ஜோடி கைவிலங்கு கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த கைவிலங்கு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் கண்டி பிரதேசத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை (05) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த கைவிலங்கை பை ஒன்றுக்குள் வைத்து விடுதியிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.