3 வருடத்திற்கு மேலாக ரஷியா- உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. தற்போது இரு நாடுகளும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் விமான போக்குவரத்தை மிகவும் நேர்த்தியாக கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தக்கூடும் என ரஷியாவின் ஏராளமான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்கட்கிழமை (07) போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து ரோமன் ஸ்டாரோவாய்ட்டை நீக்கினார்.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரத்தில், ரோமன் ஸ்டாரோவாய்ட் காருக்குள் பிணமாக கிடந்துள்ளார். தற்போது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
இருப்பினும், புடின் எந்த காரணத்திற்காக அவரை போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார் என்பது இன்னும் தெரியவில்லை என்று வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
கடந்த வருடம் மே மாதம்தான் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்னதாக சுமார் ஐந்து வருடம் குர்ஸ்க் பிரந்தியத்தின் ஆளுநராகச் செயல்பட்டு வந்தார். தற்போது அன்ட்ரெய் நிகிடின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவ்கோரோட் பிராந்தியத்தின் முன்னாள் ஆளுநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.