சீதாவக்கை பிரதேச சபையின் தலைவர் மற்றும் பிரதித்தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதைத் தடுக்கும் வகையில் மேல்மாகாண ஆணையருக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை புதன்கிழமை (9) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை (07) தீர்மானித்தது.
இந்த மனு திங்கட்கிழமை (07) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது இந்த உத்தரவை நீதிபதிகள் குழாம் பிறப்பித்தது.
இதன்போது இந்த மனுவின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மேல் மாகாண ஆணையாளர் சார்பில் மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெரனல் சுமதி தர்மவர்தன, இந்த மனு தொடர்பில் தனது சேவை பொருநர்கள் வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
சீதாவக்கை பிரதேச சபையின் தலைவர் மற்றும் பிரதித்தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின் அறிக்கை மற்றும் குரல் பதிவுகளை ஆட்சேபனை களுடன் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மன்றில் விடயங்களை முன்வைத்து, குறித்த ஆட்சேபனைகள் தொடர்பாக தாம் பிரதிவாதங்களை முன்வைக்க தனக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
மதுகம பிரதேச சபைக்கான இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கு பொறுப்பான தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, அதனுடன் தொடர்புடைய குறிப்புகளை மன்றில் கோரிக்கை விடுத்தார். இதற்கமைய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறித்த குறிப்புகள் மன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் சீதாவக்கை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்களின் சார்பில் சட்டத்தரணி சாமர நாணயக்கார மற்றும் ஜனாதிபதி நிகல் ஹட்ச் விடயங்களை முன்வைத்து, இந்த மனு மீதான ஆட்சேபனைகளை முன்வைக்க தமக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதற்கமைய இந்த மனுவை நாளைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த மனு குறித்த பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் மேல் மாகாண தேர்தல் ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தர உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
சீதாவக்கை பிரதேச சபையில் எதிர்க்கட்சியே பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர்கள்,
சம்பந்தப்பட்ட பிரதேச சபையின் தலைவர் மற்றும் பிரதித்தலைவரைத் தெரிவு செய்வதற்காக மேல் மாகாண சபை ஆணையர் சாரங்கிகா ஜெயசுந்தர தலைமையில் கடந்த 17 ஆம் திகதி ஒரு கூட்டமொன்று நடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்போது மேல் மாகாண ஆணையாளர் இரகசி வாக்கெடுப்பை நடத்த தீர்மானித்ததாகவும் எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் 24 பேர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்ததாகவும் மனுதாரர்கள் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதையடுத்து சபை ஒத்தி வைக்கப்பட்டதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய மேல் மாகாண ஆணையர் சீதாவக்கை பிரதேச சபையின் தலைவர் மற்றும் பிரதித்தலைவரை தெரிவு செய்வதற்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்த எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும் அந்த தீர்மானத்தை செயல்படுத்துவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் தமது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

