நாட்டில் உள்ள விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை ஆய்வு செய்யவது எதிர்காலத்தில் விபத்துகளின் அபாயத்தைக் குறைக்க குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பத்தாவது தேசிய விபத்து தடுப்பு வாரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் திங்கட்கிழமை (7) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
இந்நாட்டில் 7 பேரில் ஒருவர் ஒவ்வொரு வருடமும் சிகிச்சையளிக்க வேண்டிய விபத்துகளில் சிக்க நேரிடும். ஒவ்வொரு நிமிடமும் 6-8 பேர் வரை வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற வேண்டிய விபத்துகளுக்கு ஆளாகுகின்றனர். அந்தவகையில் அன்றாட வாழ்வில் நிகழும் விபத்துகளை கருத்தில் கொள்ளும் போது ஒவ்வொரு இலங்கையரும் வருடத்துக்கு ஒருமுறையேனும் விபத்துக்குள்ளாகலாம். 15 தொடக்கம் 44 வயதுக்குட்பட்டவர்களே பெருமளவில் விபத்துகளில் சிக்குவதுடன், இவ்வயதினரிடையே மரண வீதம் அதிகரிப்பதற்கு விபத்துகள் முக்கிய காரணமாக உள்ளது.
வருடாந்த வரவு – செலவு திட்டத்தில் சுகாதாரத் துறைக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் குறிப்பிடத்தக்க தொகை விபத்துகளால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் சிகிச்சைக்காக செலவிடப்படுகிறது. விபத்துகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.ஆகையால் தேசிய விபத்து தடுப்பு வாரத்திற்கு ஏற்ப இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஜூலை 7 ஆம் திகதி வீதி விபத்து தடுப்புக்கும், ஜூலை 8 ஆம் திகதி பணியிடங்களில் இடம்பெறும் விபத்து தடுப்புக்கும், ஜூலை 9 ஆம் திகதி வீடு மற்றும் முதியோர் இல்லங்களில் சம்பவிக்கும் விபத்து தடுப்புக்கும், ஜூலை 10 ஆம் திகதி நீர் நிலை விபத்து தடுப்புகும், ஜூலை 11 ஆம் திகதி பாலர் பாடசாலை, பாடசாலை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலைய விபத்து தடுப்புப்புக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இக்காலப்பகுதியில் , சுகாதார அமைச்சு விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை ஆய்வு செய்யவது எதிர்காலத்தில் விபத்துகளின் அபாயத்தைக் குறைக்க குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றார்.

