அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளப்பெருக்கு ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு

54 0

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (06) 78 ஆக அதிகரித்துள்ளது. அதில் 28 சிறுவர்களும் அடங்குவர்.

டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு அதிகளவு ஏற்பட்ட மையப்பகுதியான ஹில் கன்ட்ரியில் உள்ள கெர் கவுண்டி மாவட்டத்தில் 28 சிறுவர்கள் உட்பட  68 பேர் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸில் வேறு இடங்களில் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு,  41 பேர் காணாமல் போயுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோடைக்கால முகாமில் இருந்து காணாமல் போன மாணவிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு பயங்கரமான சம்பவம், முற்றிலும் கொடூரமானது. எனவே, இவ்வளவு துன்பங்களை அனுபவித்த அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக, கடவுள் ஆசீர்வதிப்பாராக, டெக்சாஸ் மாநிலத்தை கடவுள் ஆசீர்வதிப்பாராக” என அவர் நியூ ஜெர்சி மாநிலத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வெள்ளப் பெருக்கினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்று நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த  கேம்ப் மிஸ்டிக் கோடைக்கால பெண்கள் முகாம் ஆகும்.  அங்கு 10 கேம்ப் மிஸ்டிக் முகாம்வாசிகளும் ஒரு ஆலோசகரும் இன்னும் காணவில்லை என கெர் கவுண்டி ஷெரிப் லாரி லீதா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சுதந்திர தின விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை மத்திய டெக்சாஸ் பகுதியில் பெய்த மழையினால் அருகிலுள்ள குவாடலூப் நதி கரைகளை உடைத்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.