சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் பயணிகள் பேருந்தொன்று மரமொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 15 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் தெதுறு ஓயா பாலத்துக்கு அருகாமையில் வெள்ளிக்கிழமை (4) காலை 11.30 மணியளவில் மேற்படி விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. பருத்தி துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்தொன்று கட்டுபாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் காயமடைந்த பேருந்து சாரதி உட்பட சுமார் 15 பேர் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவத்தை அடுத்து சிலாபம்- புத்தளம் பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தததுடன், சில மணித்தியாலங்களுக்கு போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்தது.

